41 அகதிகளை பிரான்ஸுக்குள் அனுப்பி வைத்த சுவிஸ்! விசாரணைகள் ஆரம்பம்!!


ஆப்கானிஸ்தான் அகதிகள் 41 பேரை பிரான்ஸுக்குள் அனுப்பி வைத்துள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந் நிலையில் அகதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த புதன்கிழமை கார்-து லியோன் (Gare de Lyon) தொடருந்து நிலையத்தில் வைத்து 41 அகதிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதான அனைவரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகள் எனவும், அவர்களிடம் பிரான்சுக்குள் நுழைவதற்குரிய அனுமதி பத்திரம் எதுவும் இருக்கவில்லை எனவும் தெரியவந்தது. ஆனால் அவர்களிடம் பயணச்சிட்டை மாத்திரம் இருந்துள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அதிகாரிகளே தமக்கு பயணச்சிட்டை ஏற்பாடு செய்து தந்ததாக அகதிகள் தெரிவித்துள்ளனர்.

“இச் சம்பவம் உண்மையானதாக இருந்தால் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்” என உள்துறை அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதேவேளை குறித்த TGV தொடருந்து ஒஸ்ரியாவில் இருந்து சூரிச் நகரம் வழியாக பரிசுக்கு வருகை தந்ததாகவும், அகதிகளுக்கு சூரிச் நகரில் வைத்து சுவிட்சர்லாந்து அதிகாரிகள் பயணச்சிட்டை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post