பிரான்ஸில் "சுனாமி அலை" போன்று வேகமாகத் தாக்குகிறது வைரஸ்! சுகாதார அமைச்சர் அபாயச் சங்கு!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸில்  எதிர்பாராத அளவில் தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து எட்டாயிரம் (208,000)புதிய தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் அறிவித்திருக்கிறார்.

"நாட்டில் ஒவ்வொரு நொடிக்கும் இரண்டு தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர்" என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

சுகாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கான அலகுகளை வலுப்படுத்துவதற்கான சட்ட விவகாரக் குழு முன்னிலையில் இன்று புதன்கிழமை பகல் விளக்கம் அளித்த அமைச்சர், டெல்ரா, ஒமெக்ரோன் ஆகிய இரண்டு திரிபுகளும் நாட்டைச் "சுனாமி அலையாகத்" தாக்கிவருகின்றன (Un raz-de-marée) என்று குறிப்பிட்டார். தொற்றின் வேகத்தை விளக்குவதற்கு அமைச்சர் இந்த வார்த்தையைப் (Un raz-de-marée)பயன்படுத்துவது இதுவே முதல்முறை ஆகும்.

கடந்த சில நாட்களில் பத்து லட்சம் பேர் புதிதாகத் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். நாட்டின் சனத் தொகையில் பத்து வீதமானவர்கள் தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களாக இருக்கின்றனர் என்பதை நாங்கள் மதிப்பிட முடியும். நாளொன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் புதிய தொற்றாளர்கள் என்ற கணக்கில் தொற்றுக்கள் அதிகரித்துச் செல்கின்றன இது எதிர்பாராத ஒரு நிலைமை ஆகும்.

ஐந்து மில்லியன் மக்கள் ஒரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர் பாரிஸ் பிராந்திய மருத்துவமனைகளின் அதிதீவிரசிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டிருப்போரில் 70 வீதமானவர்கள் தடுப்பூசி ஏற்றாதவர்களாவர். ஊசி ஏற்றாதவர்களுக்கு அதனைப் போட்டுக் கொள்வதற்கு இன்னமும் சிறிது அவகாசம் இருக்கிறது.

-இவ்வாறு அமைச்சர் ஒலிவியே வேரன்தெரிவித்துள்ளார்.
  • ரியூனியன் தீவில் மூன்று வாரங்கள் இரவு ஊரடங்கு முடக்கம்!
இந்துமா கடலில் உள்ள பிரான்ஸின் நிர்வாகப் பிராந்தியமாகிய ரியூனியன் (Réunion) தீவில் இரவு ஊரடங்கு அமுல் செய்யப்படவுள்ளது. ஒமெக்ரோன் தொற்றுக்களால் சுகாதார சேவைகள் சீர்குலைவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

எதிர்வரும் சனிக்கிழமை தொடக்கம் அங்கு இரவு 21.00 முதல் மறுநாள் காலை 05.00 மணிவரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.
Previous Post Next Post