காணித் தகராறு: மாமனை வெட்டிக் கொன்ற மருமகன்! (படங்கள்)

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு வயல் பிரதேசத்தில் தாய் மாமனுக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட கை கலப்பில் தாய் மாமன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (21.12.2021) இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல் மஜ்மா மேற்கு முள்ளிவட்டவான் விவசாய கண்டத்தில் உள்ள வயல் காணி தொடர்பாக சகதோரர் ஒருவருக்கும் அவரது சகோதரிக்கும் இடையில் காணி தகராறு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சகோதரியின் மகனுக்கும் தாய் மாமனுக்கும் ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்கான காரணம் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை மரணமடைந்தவரின் தாயாரான சேகு இஸ்மாயில் உம்மு சல்மா என்பவர் தெரிவிக்கையில் நானும் எனது கொலை செய்யப்பட்ட மகனும் வயலுக்கு உரம் எறிவதற்கு வந்த போது வயலுக்குள் எனது மகளின் மகன் வேலை செய்து கொண்ருந்தார் அப்போது எனது மகன் ஏன் எனது காணிக்குள் வந்தாய் என்று எனது பேரனிடம் கேட்ட போது அவருக்கு அடித்து வெட்டிவிட்டு என்னிடம் உனது மகனை வெட்டியுள்ளேன் கொண்டு போ என்று சொல்லிவிட்டு எனது பேரன் போனார் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முள்ளிவட்டவான் விவசாய அமைப்பு தலைவர் ஐ.எல்.எம். முஸ்தபா கருத்து தெரிவிக்கையில்.

நானும் என்னுடன் மற்றுமொரு விவசாயியும் முச்சக்கர வண்டியில் வரும் போது உசனார் பௌசான் என்பவர் எனது மாமாவை வெட்டி விட்டேன் அவரை உங்கள் ஆட்டோவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள் என்று தெரிவித்தார். அவருடன் நானும் என்னுடன் வந்தவர்களும் வந்து பார்த்த போது பௌசான் தெரிவித்தார் அவர் மரணித்து விட்டார் நீங்கள் அம்புலன்ஸ்க்கு அறிவியுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார் என்று தெரிவித்தார்.

மீறாவோடை மாஜ்சோலை பள்ளிவாயில் வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அலியார் ஹமீட் (வயது – 38) என்பவர் மரணமடைந்துள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாழைச்சேனை பொலஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post