பிரான்ஸில் மீண்டும் செயலிழக்கும் பாடசாலைகள்!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸில் ஆசிரிய தொழிற்சங்கங்கள் மீண்டும் பணி நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதனால் இந்த வாரமும் வியாழக்கிழமை பாடசாலைகள், கல்லூரிகள் (les écoles, collèges et lycées) என்பன செயலிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் இணைந்து பெற்றோருக்கான சங்கமும் மாணவர் இயக்கமும் அன்றைய தினம் அரசுக்கு எதிராகப் பேரணிகளை நடத்துமாறும் அழைப்புவிடுத்துள்ளன. 

பாடசாலைகளில் அரசு நடைமுறைப்படுத்திவருகின்ற 'கோவிட்' சுகாதார விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பாடசாலைகளுக்கும் கல்வி நிர்வாகத்துக்கும் நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுமே இரண்டாவது வாரமாக ஆசிரியர்கள் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
 
கடந்த வியாழனன்று நடந்த வேலை நிறுத்தத்துக்குப் பிறகு அரசுக்கும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெற்றிருந்தன.

அதன் பிறகு பிரதமரும், கல்வி அமைச்சரும் வழங்கிய உறுதி மொழிகள் காத்திரமானவையாக இல்லை என்று சில தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டி உள்ளன. அதேசமயம் தற்போதைய கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer பாடசாலைகளில் அமுல் செய்துவருகின்ற வைரஸ் தடுப்பு சுகாதார நடவடிக்கைகள் மிகவும் குழப்பம் நிறைந்தவையாக உள்ளன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மிக அதிக எண்ணிக்கையான சிறு பிள்ளைகளும் மாணவர்களும் ஒமெக்ரோன் தொற்றுக்கு இலக்காகி வருவதால் நாட்டின் கல்வி நிர்வாகம் கடந்த சில நாட்களாகக் குழப்ப நிலையை அடைந்துள்ளது.
 
நத்தார் விடுமுறைக்குப் பின்னர் ஜனவரி தொடக்கத்தில் பாடசாலைகள் ஆரம்பித்த சமயத்தில் கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer புதிய சுகாதார விதிகளை ஆரம்ப நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாகவே திடீரென வெளியிட்டிருந்தார்.  அவரது அந்தக் கடைசி நேர அறிவிப்புப் பாடசாலை நிர்வாகங்களுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருந்தது.

கல்வி அமைச்சர் மத்திய கடல் தீவுகளில் ஒன்றாகிய Ibiza தீவில் விடுமுறையைக் கழித்த நிலையிலேயே அங்கிருந்தவாறு புதிய சுகாதார விதிகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இந்தத் தகவல் ஊடகம் ஒன்றினால் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் மீது ஆசிரியர் தொழிற்சங்கங்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது.

கடைசியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பாடசாலைச் சுகாதார விதிமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் கல்வி அமைச்சருடன் முகத்துக்கு நேரே வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன. 

ஆயினும் அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் கல்வி அமைச்சர் மீது அரசின் நம்பிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
Previous Post Next Post