ரஷ்யா வசமாகிறது உக்ரைன்? பொம்மை அரசொன்றை நிறுவப் புது முயற்சி!


உக்ரைன் தலைநகர் கீய்வை விரைவில் ரஷ்யப் படைகள் கைப்பற்றக்கூடும். இது இன்று அடுத்த சில மணி நேரங்களிலே, நாளையோ நடக்கக்கூடும் என்று சிரேஷ்ட மேற்கத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரஷ்ய துருப்புக்கள் டினீப்பர் ஆற்றின் இருபுறமும் உக்ரைனை நோக்கி முன்னேறி வருகின்றன. அவர்கள் தலைநகரைக் கைப்பற்றத் தயாராக இருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

ரஷ்ய இராணுவம் உக்ரைனில் பல விமான நிலையங்களை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் உக்ரைனுக்குள் அதிக ரஷ்யப் படைகளை அனுப்புவது இலகுவாகி உள்ளது எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் முழுவதையும் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. உக்ரைனைக் கைப்பற்றி, தற்போது உள்ள அரசாங்கத்தை அகற்றி, ரஷ்யா சார்பு பொம்மை அரசொன்றை நிறுவதே ரஷ்யாவின் நோக்கம் எனவும் அவதானிகள் கூறுகின்றனர்.

இருப்பினும் இராணுவ நடவடிக்கைகள் இதுவரை நாட்டின் கிழக்கு, தெற்கு மற்றும் தலைநகரை மையமாகக் கொண்டே இடம்பெற்று வருகின்றன.

ரஷ்ய துருப்புக்களுடன் வியாழன் அன்று உக்ரேனியப் படைகள் போரிட்டு நாடு முழுவதும் உள்ள இராணுவ நிலைகளை பாதுகாத்ததாக கூறிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யப் படைகளை தொடர்ந்தும் உறுதியுடன் எதிர்கொள்வோம் என்று கூறினார்.

அத்துடன், தானும் ஏனைய அதிகாரிகளும் இன்னமும் தலைநகர் கிய்வில் இருப்பதாக அவா் தெரிவித்தார். தனது குடும்பமும் அங்கே தான் இருப்பதாகவும் அவா் குறிப்பிட்டார்.

சுமார் 3 மில்லியன் மக்கள் வசிக்கும் கிய்வ் நகரம் ரஷ்யர்கள் கட்டுப்பாட்டில் வந்தால் அங்கு தீவிர வன்முறைகள் நிகழக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உக்ரைனில் 11 விமானத் தளங்கள், 3 கட்டளை மையங்கள், ஒரு கடற்படைத் தளம் மற்றும் 18 ராடர் நிலையங்கள் உட்பட 74 படைத் அழித்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் கிய்வில் இருந்து வடக்கே 90 கிமீ தொலைவில் உள்ள செர்னோபில் உள்ள உக்ரைன் அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் நேற்று கைப்பற்றியதாக உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Previous Post Next Post