யாழ். தீவகத்தை உலுக்கிய கொள்ளைக் கும்பல் கூண்டோடு கைது! 60 பவுண் நகைகளும் மீட்பு!!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உடைந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மேலும் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 60 தங்கப்பவுண் நகைகள் மற்றும் ஒருதொகை பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் காரைநகர் புங்குடுதீவு, ஊர்காவற்றுறை, வேலணை உள்ளிட்ட பிரதேசங்களில் பகல் நேரங்களில் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்ற வேளைகளில் வீடு உடைத்து நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் ஊர்காவற்றுறை பொலிஸில் உள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து திருட்டு நகைகளை கொள்வனவு செய்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 60 பவுண் நகைகளும் ஒருதொகை பணமும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது வேலணை அராலி வீதியில் உள்ள வீடொன்றில் 20 பவுண் தங்க நகைகளும் வங்களாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் 7 1/2 பவுண் நகைகளும் சுருவில் பகுதியில் உள்ள வீடொன்றில் 13 பவுண் நகைகளும் புங்குடுதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் 3 பவுண் நகைகளும் திருடப்பட்டமை கண்டறியப்பட்டது.

அத்துடன், முழங்காவில் மற்றும் காரைநகர் பகுதியில் உள்ள இருவேறு வீடுகளில் 11 பவுண் நகைகளும் திருடியுள்ளமையை சந்தேக நபர்கள் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

சந்தேக நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் நீண்ட காலமாக திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களுக்கு நீதிமன்றங்களினால் 16 பிடியாணை உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான அணியினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
Previous Post Next Post