காதலி ஏமாற்றியதால் போதைக்கு அடிமையான பல்கலைக்கழக மாணவன்! மகனின் நிலை கண்டு தற்கொலைக்கு முயன்ற தாய்!!

உயர்தரத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்று வந்த 22 வயதான யாழ்ப்பாணத்தை சேந்த மாணவன் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் தாயார் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் கொழும்பு- வெள்ளவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வெளிநாட்டிலுள்ள தங்கையின் வீட்டில் தனது இன்னொரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்றுவரும் நண்பருடன் தங்கியிருந்து குறித்த மாணவன் கற்று வந்துள்ளார்.

இந் நிலையில் கடந்த இரு மாதங்களாக மாணவன் யாழில் உள்ள தனது பெற்றோர் மற்றும் உறவுகளுடன் தொடர்பு கொள்வதை குறைத்து வந்துள்ளார். மாணவனுக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு எடுக்கும் போது மாணவனின் நண்பனே பல தடவைகள் தொலைபேசியில் பதிலளித்துள்ளார்.

அத்துடன் மாணவன் பல நாட்கள் பல்கலைக்கழக வகுப்புக்குச் செல்லவில்லை என வேறு நண்பர்கள் மூலம் தகவல் அறிந்த நிலையில், தாயார் கடந்த வாரம் கொழும்பு சென்றுள்ளார்.

அங்கு சென்ற பின்னரே தனது மகன் கொடிய ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான விடயம் தெரிந்துள்ளது. மனநலம் குன்றியது போல் அறை மூலையில் தனித்திருந்த மாணவன் தனது பெற்றோர் வந்திருப்பதை கூட அறியாத நிலையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதே மாணவன் போதைப் பொருளுக்கு அடிமையான விடயம் அறியவந்துள்ளது. மாணவனுடன் கூட இருந்த மாணவனின் நண்பனிடம் இது தொடர்பாக பெற்றோர் வினவியபோது,

யாழில் உள்ள காதலி தன்னை ஏமாற்றி விட்டதாகவும் ஆகவே இது தொடர்பாக தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறி அறையை பூட்டியபடி இருப்பதால் தான் அவனது நடவடிக்கையை கண்டு கொள்ளவில்லை எனவும் நண்பன் பதிலளித்துள்ளார்.

இரு நாட்களாக வைத்தியசாலையில் வைத்து மகனுடன் மல்லுக்கட்டிய நிலையில் மகனை போதை சீர்திருத்த பிரிவில் சேர்க்கும்படி கூறிய வைத்தியசாலை அவரை வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவனின் தாயார் கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
Previous Post Next Post