கனடாவில் தொழிலாளர் தட்டுப்பாடு! சமாளிக்க வெளிநாட்டவருக்கு தாராளமாக வதிவிட அனுமதி!!

கனடாவின் சமஷ்டி அரசு நாட்டுக்குள் உள்வாங்குகின்ற வெளிநாட்டுக் குடியேறிகளின் எண்ணிக்கையைப் பெரிய அளவில் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. குடியேறிகளுக்கு நிரந்தர வதிவிடம் வழங்குவதை அடுத்து வரும் ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து அதனை 2025 முதல் வருடாந்தம் ஐந்து லட்சங்களாக உயர்த்துவதற்குக் குடியேற்ற அமைச்சு முடிவு செய்துள்ளது.

புதிய குடியேற்றத் திட்டத்தின் விவரங்களைக் குடிவரவு மற்றும் குடியுரிமை, அகதிகள் விவகார அமைச்சர் சீன் ஃப்ரேசர் (Sean Fraser) செவ்வாய்கிழமை வெளியிட்டார்.

தொழில் திறமை மற்றும் தொழில் அனுபவத்தின் அடிப்படையில் குடியேறிகளை உள்வாங்குவது அடுத்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள பத்து லட்சம் தொழிலாளர்களுக்கான வெற்றிடங்களை வெளிநாட்டுக் குடியேறிகளைக் கொண்டு நிரப்ப வேண்டியது கனடாவின் பொருளாதாரச் செழிப்புக்கு அவசியம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

கனடா சுகாதாரம், உற்பத்தி, பொறியியல், தொழில் நுட்பம் போன்ற துறைகளில் பெரும் ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. அதனைச் சமாளிப்பதற்காக நாட்டுக்குள் அனுமதிக்கின்ற குடியேற்றவாசிகளில் 60 வீதமானவர்களைப் பொருளாதாரக் குடியேறிகளாக(economic migrants) உள்வாங்கி அவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை(permanent residence) வழங்குவது கனடா அரசின் இலக்காக உள்ளது. அதேசமயம் கனடாவில் வசிப்போர் தங்கள் குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைப்பதைத் துரிதப்படுத்தும் அதேவேளை நாட்டுக்குள் அகதிகளை (refugees) வரவேற்பதைக் குறைப்பதும் அரசின் புதிய திட்டத்தில் உள்ளடங்கியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு கனடா 4லட்சத்து 5ஆயிரம் வெளிநாட்டுக் குடியேறிகளை நாட்டுக்குள் அனுமதித்துள்ளது. அது இதற்கு முன்னர் என்றும் இருந்திராத பெரும் எண்ணிக்கை ஆகும்.
Previous Post Next Post