ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற யுவதி! உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய பொலிஸார்!! (படங்கள்)

புத்தளம், வென்னப்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிக்கொண்டிருந்த யுவதியை காப்பாற்றியுள்ளனர்.

வாழ்க்கையில் விரக்தியடைந்து கடிதம் எழுதி வைத்து ஆற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற பொரலஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய யுவதியே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

நேற்று முற்பகல் 11.00 மணியளவில் ஹலவத்தையில் இருந்து கொழும்பு செல்லும் பிரதான வீதியில் ஹனஹொட்டுபொல சந்தியிலிருந்து பொரலஸ்ஸ பகுதிக்கு செல்லும் பக்க வீதியில் கிங் ஓயாவின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு அருகில் இந்த யுவதி நீரில் மூழ்கியுள்ளார்.

வென்னப்புவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள்களான பிரசாத் குமார மற்றும் ஜீவன் பெர்னாண்டோ ஆகியோர் வென்னப்புவ பொலிஸாரிலிருந்து பொரலஸ்ஸ பகுதிக்கு கடமைக்காகச் சென்று கொண்டிருந்த போது கிங் ஓயா பாலத்திற்கு அருகில் இந்த யுவதி நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதனை அவதானித்துள்ளனர்.

உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்திய கான்ஸ்டபிள்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து நீரில் குதித்து யுவதியின் தலைமுடியை பிடித்து கரைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.

அதனையடுத்து 1990 என்ற அம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாரவில பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த யுவதி நீரில் மூழ்கிக் கொண்ருக்கும் போது வீதியில் சென்றவர்களிடம் உதவி கேட்டப்போதிலும் நீர் ஆபத்தான மட்டத்தில் இருந்தமையால் ஒருவரும் உதவ முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதியை காப்பாற்றிய இரண்டு பொலிஸாரின் காலில் விழுந்து வணங்கி, தன் உயிரைத் திரும்பக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இருபத்தைந்தாயிரம் ரூபா பெறுமதியான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைய்டக்க தொலைபேசி நீரில் விழுந்து நாசமாகியுள்ளது.
Previous Post Next Post