பிரான்ஸ் அணிக்குத் திட்டமிட்டு வழங்கப்பட்ட விஷம்?

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

இறுதிப் போட்டியில் மோதிய இரு அணிகளும், ஆட்ட நேர முடிவில் 3 - 3 என சம நிலையில் வந்ததை அடுத்து பெனால்டி கிட் முறை கொண்டுவரப்பட்டது.

அதில் 4 - 2 என்ற கோல் கணக்கில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது.

இந்த நிலையில் பிரபல பிரித்தானிய ஊடக நட்சத்திரம் பியர்ஸ் மோர்கன் தெரிவிக்கையில், கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பாக பிரான்ஸ் அணி வீரர்களுக்கு வேண்டுமென்றே விஷம் அளித்ததாக சந்தேகம் எழுப்பியுள்ளார்.

நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் திணறியபடி விளையாடியதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் அர்ஜென்டினா முதல் பாதியில் இரு கோல்களுடன் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியது. இதனிடையே பிரான்ஸ் வீரர்கள் ஒட்டகக் காய்ச்சலுக்கு இலக்கானதாக சிலர் தெரிவிக்க, இது கண்டிப்பாக தொற்றாக இருக்க வாய்ப்பில்லை எனவும் பிரான்ஸ் வீரர்களுக்கு திட்டமிட்டே விசம் அளிக்கப்பட்டுள்ளது என பியர்ஸ் மோர்கன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் முக்கியமான ஆட்டம் ஒன்றில் அர்செனல் அணியை எதிர்கொண்ட டோட்டன்ஹாம் அணி வீரர்கள், முந்தைய நாள் இரவு ஃபுட் பாய்சன் காரணமாக அவதிக்குள்ளானதும், அந்த ஆட்டத்தில் அர்செனல் அணி வென்றதும் வரலாறு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே சூழலை தற்போது பிரான்ஸ் அணியும் எதிர்கொள்கிறதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
Previous Post Next Post