யாழ்.நீதிமன்றில் அடாவடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நடவடிக்கையின் போது இடையூறாக செயற்பட்ட பெண் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைகள் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வேளை போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபரை பார்க்க அவரது தாயார் வந்துள்ளார். அவர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக மகனை சந்திக்க முற்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணை அமைதி பேணுமாறு நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். எனினும் அவர் சத்தமிட்டதனால் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பெண் மீது வழக்குத் தொடரப்பட்டு மன்றில் முற்படுத்தப்பட்டார்.

வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சந்தேக நபரை வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
Previous Post Next Post