யாழில் பிரதேச செயலரின் வாகனத்தை மோதித் தள்ளிய கடத்தல்காரர்கள்! (படங்கள்)

கள்ள மணல் கடத்தல் வாகனம் ஒன்று, வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை) பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ வாகனத்தை மோதிவிட்டுத் தப்பியோடியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றுக் காலை 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கடமைக்காகப் பிரதேச செயலாளரை அழைத்து வருவதற்காகப் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலிருந்து புறப்பட்ட வாகனத்தைப் பருத்தித்துறை பிரதான வீதியில் தட்டாதெரு பக்கமாக இருந்து பிரதான வீதிக்கு வந்த கள்ள மணல் கடத்தல் வாகனம் மோதிவிட்டுத் தப்பியோடியுள்ளது.

இதனால் பிரதேச செயலாளரின் வாகனம் சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன் சாரதி தெய்வாதீனமாகக் தப்பியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சேதத்துக்குள்ளான பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ வாகனத்தைப் பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பருத்தித்துறை பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் சாரதியையும் தேடி வருகின்றனர்.
Previous Post Next Post