பகிடிவதைக் கொடுமை! யாழில் பல்கலைக்கழக மாணவன் உயிர்மாய்க்க முயற்சி!!

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன், சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதையைத் தாங்காது தவறான முடிவு எடுத்து உயிர்மாய்க்க முயன்றுள்ள நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

வறுமையான குடும்பப் பின்னணியிலிருந்து மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான 23 வயதான மாணவனே பகிடிவதைக் கொடுமையால் இவ்வாறான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

சிரேஷ்ட மாணவர்கள் தினமும் மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் தொலைபேசியில் தங்களுடன் கதைக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளனர்.

அத்துடன் சிரேஷ்ட மாணவர்களுக்கு மரியாதை செலுத்துவேன் என்று ஆயிரம் தடவை எழுதித் தருமாறும் பணித்துள்ளனர்.

இவ்வாறான பகிடிவதைக் கொடுமைகளுக்கு மேலதிகமாக, விடுமுறையில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சிரேஷ்ட மாணவர்கள் இருவர் இந்த மாணவனை அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.

இதையடுத்து பல்கலைக்கழகத்துக்குச் செல்லமாட்டேன் என்று வீட்டிலிருந்தவர்களிடம் மாணவன் தெரிவித்துள்ளார்.

வீட்டார் பல்கலைக்கழகத்துக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தியதையடுத்து யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து மாணவன் வெளியேறிச் சென்றுள்ளார்.

காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் 2 நாள்களும், அதன் பின்னர் தெல்லிப்பழை பகுதியிலுள்ள பாழடைந்த வீட்டில் 2 நாள்களும் குறித்த மாணவன் தனித்திருந்துள்ளார்.

"பகிடிவதைக்கு உள்ளான மாணவன் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் தனித்திருந்த நிலையில் மீட்கப்பட்டான்" என்பதை உறுதிப்படுத்திய கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மாணவன் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்க்க முயற்சிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

ஆனால், மருத்துவச் சோதனைகளில் மாணவன் அவ்வாறு முயற்சித்தமை கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ். மாணவன் பகிடிவதை கொடுமை காரணமாக 1996ஆம் ஆண்டு உயிரிழந்தமையையடுத்து கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் பிற வன்முறைகளைத் தடை செய்யும் 1998ஆம் வருட, 20ஆம் இலக்கச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகின்றது.
Previous Post Next Post