பளைப் பகுதியில் மாணவர்களை ஏற்றி பயணித்த கப் வாகனம் விபத்து! (படங்கள்)

மாணவர்களை ஏற்றி பயணித்த கப் வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி இடம்பெற்று வரும் நிலையில் மரதன் போட்டிக்காக மாணவர்களை ஏற்றி பயணித்த வாகனமே இன்று காலை 6 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இயக்கச்சி பகுதியிலிருந்து பளை நோக்கி மாணவர்களை மரதன் ஓட்டத்திற்காக ஆரம்ப இடத்திற்கு மாணவர்களை ஏற்றி சென்ற குறித்த கப் வாகனம் புதுக்காட்டு சந்தியை அண்மித்து ஏ-9 பிரதான வீதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது குறித்த வாகனத்தின் பின்னால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு கூடாரம் வாகனத்தை விட்டு அகன்றபோது மாணவர்களும் வீதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் பயணித்த 11 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த 11 மாணவர்களும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் பளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை குறித்த வாகனத்தை செலுத்திய சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post