பிரான்ஸ்: மயிரிழையில் தப்பிப் பிழைத்தது மக்ரோன் அரசு!

எலிசபெத் போர்ன் தலைமையிலான அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிப் பிழைத்துவிட்டது. அரசு மீது கொண்டு வரப்பட்ட இரண்டு வெவ்வேறு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் நேற்று மாலை சபையில் தோல்வியடைந்தன.

கட்சி சாரா சுயாதீனக் குழு ஒன்றினால் முன்வைக்கப்பட்ட முதலாவது பல கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை (cross-partisan censure motion) சபையில் ஆக ஒன்பது வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

அரசைக் கவிழ்ப்பதற்குக் குறைந்தது 287 வாக்குகள் தேவை என்ற நிலையில் முதலாவது பிரேரணைக்கு 278 வாக்குகளே ஆதரவாகக் கிடைத்தன. அதனால் அது தோல்வியடைந்தது. இடது சாரிகளது முழு ஆதரவுடன் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பிரேரணையே எலிசபெத் போர்னின் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் என்று மிகப் பரவலாக நம்பப்பட்டது.

தொடர்ந்து மரின் லூ பென் அணியினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடந்தது. அந்தப் பிரேரணை ஆக 94 வாக்குகளை மட்டுமே பெற்றுப் படுதோல்வியடைந்தது.

லியோட் '(Liot) என்ற கட்சி சாராத சுயாதீன எம்பிக்கள் குழு ஒன்றின் சார்பில் ஒன்றும் மரின் லூ பென் அம்மையாரின் தேசிய எழுச்சிக் கட்சியின் (Rassemblement national) சார்பில் மற்றொன்றுமாக இரண்டு பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அந்த இரண்டு பிரேரணைகளுமே இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவை மீது உறுப்பினர்களது வாதங்கள் முன்வைக்கப்பட்டன. விவாதங்கள் மாலை வரை தொடர்ந்தன. விவாதங்களின் முடிவில் பிரதமர் எலிசபெத் போர்ன் உரையாற்றினார்.

அதன் பின்னரே இரண்டு பிரேரணைகள் மீதும் வாக்கெடுப்பு தனித்தனியாக நடத்தப்பட்டது.
Previous Post Next Post