பிரான்ஸில் மெற்றோ 6 வழித்தடத்தில் ரயில் கதவுக்குள் ஜக்கெட் சிக்கியதில் பெண் நசியுண்டு உயிரிழப்பு!

பாரிஸ் மெற்றோ வழித்தடம் 6 இல் (ligne 6) சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 45 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார்.பாரிஸ் 12 ஆவது நிர்வாகப் பிரிவில் அமைந்ததுள்ள Bel-Air ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

ரயிலில் இருந்து இறங்கிய பெண் ஒருவரே ரயிலின் அடியில் சிக்கிக் கொண்டதில் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. நிலையத்தில் தரித்த ரயிலில் இருந்து அவசரமாக இறங்கிய சமயம் அவர் அணிந்திருந்த ஜக்கெட் கதவுக்குள் சிக்குண்டது. தானியங்கிக் கதவுகள் மூடியதும் ரயில் புறப்பட்டது.

ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட அவரது உடலின் ஒருபகுதி ரயிலுக்கும் ரயில் தள மேடைக்கும் இடையே அகப்பட்டு நசியுண்டது. ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. அவசர உதவி மீட்புப் படையினர் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டனர். சுமார் இருபது நிமிடங்களின் பின்னர் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

பொலீஸார் ரயில் சாரதியின் உடல் நிலைமையைப் பரிசோதித்தனர். அவர் மிகவும் அதிர்ச்சியுற்றவராகக் காணப்பட்டார் என்றும் பின்னர் முதலுதவிப் பிரிவினரால் நீண்ட நேரம் பராமரிக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த பெண் யார் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. RATP போக்குவரத்து நிறுவனம் உயிரிழந்த பெண்ணுக்கு அஞ்சலியையும் உறவினர்களுக்கு ஆறுதலையும் வெளியிட்டிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் RER- B ரயில் நிலையம் ஒன்றில் யுவதி ஒருவர் தண்டவாளத்தில் தவறி வீழ்ந்து ரயிலினால் மோதுண்டு உயிரிழந்தமை தெரிந்ததே. பாரிஸ் நகர ரயில்களில் சனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

ரயில்களில் முண்டியடித்து ஏறும் போதும் இறங்கும் போதும் மிக அவதானமாகச் செயற்படுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post