யாழில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு? பெண்ணொருவர் படுகாயம்!

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாடசாலைக்கு அருகில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாடசாலைக்கு அருகில் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் கட்டுப்படுத்துவற்காக வடமராட்சி கிழக்கு பொலிஸார் சென்றவேளை சட்டவிரோத மதுபான விற்பனையாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு குழுவினருக்கும் இடையில் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் இதில் பெண் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் சிவில் உடையில் விசாரிப்பதற்காக சென்ற பொலிஸார் அந்த பிரதேச இளைஞர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இந்த சம்பத்தினை தொடர்ந்து இளைஞர்களும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று இரவு 7.30 மணியளவில் சிவில் உடைதரித்த பொலிஸார் மற்றும் பொலிஸ் உடை தரித்த 10 வரையான பொலிஸார் துப்பாக்கிகளுடன் இளைஞர்களை வீடு தேடி சென்றுள்ளனர்.

இதன்போது, வீட்டில் இருந்த பெண்கள், குடும்ப தலைவர்கள் இளைஞர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொலிஸார் சுமார் 15 முறை துப்பாக்கி சூட்டு நடத்தியுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது பெண் ஒருவர் தலையில் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த தாய் மற்றும் தந்தை ஆகியோர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது, அவ்வாறான சம்பவங்கள் எவையும் நடைபெறவில்லை என அவர் கூறுகின்றார்.

அவர் மேலும் கூறுகையில்,

குறித்த பகுதியில் கசிப்பு விற்பனை நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பொலிசார் அந்தப் பகுதிக்கு சென்றனர்.
இதன்போது அப்பகுதி மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. ஆனால் அங்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவும் இல்லை, எவரும் காயம் அடையவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post