பிரான்ஸ் அதிபர் இலங்கையில் கால்பதித்தது ஏன்? பிரஞ்சு நிபுணரின் அதிர்ச்சிக் கருத்து!

இலங்கை விடயங்களைக் கையாள இந்தியாவுக்குச் சென்றாலே போதுமானது என்ற நிலைப்பாட்டிலேயே பாரிஸ் இதுவரை இருந்து வந்துள்ளது.

இந்தியா தற்சமயம் இலங்கையில் தீர்க்கமான தலையீட்டைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

ஐரோப்பாவைப் பொறுத்தவரை அங்கு மேலெழுந்து வருகின்ற சீனாவின் செல்வாக்குத்தான் ஆர்வத்துக்குரிய விடயமாக உள்ளது. அதனை எதிர்கொள்வதே மக்ரோனின் கொழும்புப் பயணத்தின் நோக்கமாகத் தெரிகிறது.

-இலங்கை மற்றும் இந்திய உபகண்டம் தொடர்பான வரலாற்று நிபுணர் எரிக் போல் மேயர் (Éric Paul Meyer) மேற்கண்டவாறு செய்தி ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

அதிபர் மக்ரோன் தனது தென் பசுபிக் தீவுகளுக்கான பயணத்தின் முடிவில் முன்னறிவிக்கப்படாத விஜயமாகத் திடீரென இலங்கைத் தீவில் தரித்து நின்று அந்நாட்டு அரசுத் தலைவரைச் சந்தித்துத் திரும்பியிருப்பது குறித்து "பிரான்ஸ் இன்ஃபோ"(franceinfo) செய்திச் சேவை எரிக் மேயரிடம் கருத்துக் கேட்டது.

மக்ரோனின் இலங்கை விஜயம் தொடர்பாக அவர் வழங்கிய செவ்வி முழுமையாக வருமாறு :
  • கேள்வி :எமானுவல் மக்ரோன் ஏன் இலங்கைக்கு விஜயம் செய்கிறார்?
எரிக் போல் மேயர் : இந்தோ-பசுபிக் வலயம் மீதான மூலோபாயத்தில் நீங்கள் ஆர்வமாக இருக்கும்போது இலங்கையில் கால்பதிப்பது அவசியம்.இலங்கை உண்மையில் சீனர்களுக்கு மிக முக்கியமான கடல் பாதையில் உள்ளது. மேற்கு நாடுகளைப் பொறுதவரையும் அதே நிலைமை தான். தூர கிழக்கு மற்றும் சூயஸ் கால்வாய் அல்லது தென்னாபிரிக்காவிற்கு இடையில் பயணிக்கும் கப்பல்கள் இலங்கையின் கடற்கரைக்கு மிக அருகில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

மேலும், இலங்கை இந்தியாவுக்கு மிக அருகில் இருப்பதால் மற்றொரு முக்கிய மூலோபாய மையக் கோடு இதில் உள்ளது, அது வடக்கு-தெற்கு மையக்கோடாகும். அதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இலங்கை இரண்டு பெரும் சக்திகளின் நலன்களின் குறுக்கு வழியில் உள்ளது. அதனாலேயே பிரான்ஸ், மற்றும் பொதுவாக ஐரோப்பா, இலங்கைத் தீவில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பதில் ஆர்வமாக உள்ளது.
  • கேள்வி: மக்ரோனுக்கு முன்பாக பிரான்ஸின் எந்த ஒர் அதிபரும் அங்கு செல்லவில்லை என்பதை எவ்வாறு விளக்குவது?
எரிக் போல் மேயர் : விளக்குவது கடினம். என்னைப் பொறுத்தவரை இலங்கை ஒரு சிறிய நாடாகக் கருதப்பட்டமை ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் உண்மையில் அது பெரிய வரலாற்றையும் சிறிய மக்கள் தொகையையும் கொண்ட நாடாகும். இலங்கையின் விவகாரங்களைக் கவனிப்பதற்கு இந்தியாவுக்குச் சென்றுவந்தாலே போதுமானது என்று எண்ணியிருந்தமையே அங்கு விஜயம் செய்யாமல் இருந்தமைக்குக் காரணமாக இருக்கலாம்.
  • கேள்வி : சீனாவையும் இந்தியாவையும் எதிர்கொள்வதற்காக பிரான்ஸ் முயற்சிக்கின்ற ஒரு வழியா இந்தப் பயணம்?
எரிக் போல் மேயர் : இந்தியா தற்போது இலங்கையில் தீர்க்கமான செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை. பிரான்ஸின் நலன்களும் இந்திய நலன்களும் ஒன்றிணைவது போல் தெரிகிறது. ஆனால் இங்கே பிரதான கேள்வி என்னவென்றால் இலங்கைத் தீவில் அதிகரித்துவருகின்ற சீனாவின் அதிகாரமும் அங்கு அது தன்னை நிலைநிறுத்த எடுத்துவருகின்ற திட்டங்களும் தான். சீன நிறுவனம் ஒன்றினால் தீவின் தெற்கில் ஹம்பாந்தோட்டையில் கட்டப்படுகின்ற துறைமுகம் வெளிப்படையாக ஒரு கொள்கலன்கள் ஏற்றி இறக்குகின்ற துறைமுகமாகத் தெரிந்தாலும் உண்மையில் அது இராணுவ ரீதியாகத் தெளிவான ஆற்றலைக் கொண்டுள்ளது.
  • கேள்வி: மக்ரோனின் விஜயத்தில் ஒரு புதிய ராஜதந்திர வெளியை அல்லது எதிர்க்காலத்துக்கான பந்தயப் போட்டியை நாம் காண முடியுமா?
எரிக் போல் மேயர் : இருக்கலாம். சீனாவின் சக்தியுடன் ஒப்பிடும்போது, ​​இந்தோ-பசிபிக் பகுதியில் பிரான்ஸின் சக்தி என்ன? இதில் ஏற்றத்தாழ்வு இருப்பது வெளிப்படை. ஆனால் அதிபர் மக்ரோன் கொழும்புக்கு வருகை தந்த அதே நேரத்தில் ஜப்பானிய வெளியுறவு அமைச்சரும் சமகாலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இதனை நாம் எடுத்து நோக்க வேண்டும் இது சீன அதிகாரத்தின் எழுச்சியைப் பற்றி அக்கறை கொண்ட அனைவரினதும் நலன்களும் ஒன்றிணைந்திருப்பதற்கான அறிகுறியாகும்.
Previous Post Next Post