இஸ்ரேலியப் பிரதமர் நத்தன்யாகுவைக் கைது செய்யுமா பிரான்ஸ்?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நத்தன்யாகுவுக்கும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட்டுக்கும் (Yoav Gallant) எதிராகக் கடந்த வாரம் சர்வதேச கைது ஆணை விடுத்திருக்கிறது. அதனையடுத்துப் பிரதமர் நத்தன்யாகு தங்களது நாட்டின் எல்லைக்குள் வந்தால் அவரைக் கைது செய்வோம் என்று பல நாடுகளும் தெரிவித்திருக்கின்றன.

இது விடயத்தில் பாரிஸின் நிலை என்ன?

"பிரான்ஸ் சர்வதேச சட்டங்களை மதிக்கின்றது" என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிறிஸ்தோப் லுமுவான்(Christophe Lemoine) செய்தி நிறுவனங்களிடம் இது குறித்துத் தெரிவித்திருக்கிறார்.

"காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதைத் தடுக்கும் விதமாக விதிக்கப்பட்ட நிபந்தனைகள், அங்கு சர்வதேச சட்டங்களுக்கு முரணானவை என்று நாங்கள் கருதிய சூழ்நிலைகள் என்பவற்றுக்கு எதிராக எமது கண்டனத்தை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம் "-என்றும் அவர் கூறியிருக்கிறார்.

நெதர்லாந்தில் இயங்கிவருகின்ற ஐசிசி(ICC) எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் உறுப்புரிமை ஒப்பமிட்டுள்ள அங்கத்துவ நாடுகள் அனைத்தும் நத்தன்யாகு தங்களது எல்லைக்குள் பிரவேசிக்கும் சமயத்தில் அவரைக் கைது செய்யவேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளன. ஆனாலும் அவர் பிரான்ஸுக்கு விஜயம் எதனையும் மேற்கொள்வதாக இல்லை, அதனால் அது பற்றிய பேச்சு எழவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் கூறியிருக்கிறார்.

காஸாவில் இடம்பெறுகின்ற மனித உரிமைச் சட்ட மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் தரப்புக்களான இஸ்ரேல் பிரதமருக்கும் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்களுக்கும் எதிராகச் சர்வதேச பிடியாணை உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

நத்தன்யாகுவுக்கு எதிரான இந்தப் பிடியாணை, சர்வதேச நீதிமன்றத்தின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்று என்று சர்வதேச சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று உக்ரைன் போரில் இடம்பெறுகின்ற சர்வதேச சட்ட மீறல் சம்பவங்களுக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இதேபோன்ற பிடியாணையை விடுத்திருப்பது தெரிந்ததே. அது தொடர்பான முன்னைய செய்தி ஒன்றின் இணைப்பு கீழே உள்ளது.
Previous Post Next Post