முல்லைத்தீவு பிள்ளையார் ஆலயத்தில் மீண்டும் குழப்பம் (படங்கள்)

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட சாந்தி பூஜைகள் நேற்று இடம்பெற்றுள்ளது. நீதிமன்றக் கட்டளையை மீறி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் புத்தபிக்கு ஒருவரின் சடலம் எரியூட்டப்பட்ட நிலையிலேயே இதற்கான விசேட சாந்தி பூசை நேற்றைய தினம் ஆலய நிர்வாகத்தினால் நடாத்தப்பட்டது.

இந் நிலையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அதனை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

இது தொடர்பில் அங்கு பாதுகாப்புப் கடமையில் இருந்த பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தினரால் தெரியப்படுத்தப்பட்டும் பொலிஸார் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

இதனையடுத்து புகைப்படம் எடுத்த நபருடன் அங்குள்ள மக்கள் முரண்பட்டதனால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

அதன் பின் அங்கு சென்ற பொலிஸார், பெரும்பான்மையின நபருக்கு ஆதரவாகச் செயற்பட்டதாகவும், தங்களையே விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் வழிபாட்டில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வாளகத்திற்குள் அத்துமீறித் தங்கியிருந்த பௌத்த பிக்கு, கடந்த மாதம் மரணமடைந்த நிலையில், அவருடைய உடல் நீதிமன்ற உத்தரவினையும் மீறி ஆலய கேணிப் பகுதியில் தகனம் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த துர்சம்பவத்திற்காக விசேட சாந்தி பூஜை நிகழ்வொன்றை நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் நேற்று ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post