24 வருஷமா என்னை விட்டுப் பிரியாத கணவர் எங்கே? யாழில் கதறியழும் மனைவி!! (வீடியோ)

கொழும்புக்குச் சென்றவர் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்குச் சென்ற நிலையிலேயே குறித்த குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

கெருடாவில் தெற்கைச் சேர்ந்த பரமு விஜயராஜ் (வயது-48) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக நேற்றைய தினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில், இச் சம்பவம் தொடர்பில் காணாமல் போன குடும்பஸ்தரின் மனைவியான விஜயராஜ் சந்திரகலா தெரிவிக்கையில்,
எனது கணவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் விசாரணை அழைப்பின் பேரில் கடந்த-05 ஆம் திகதி எங்கள் வீட்டிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றார்.

06 ஆம் திகதி காலை-06 மணிக்கும் 07 மணிக்குமிடையில் எனக்குப் போன் பண்ணினவர். அப்போது தான் கொழும்பு வந்து சேர்ந்திற்றன் எனவும் தான் ரிஐடி அலுவலகத்துக்குச் செல்லப் போவதாகவும் கூறியிருந்தார்.

இதன்பின்னர் எனது கணவர் தொடர்பான எந்தத் தகவல்களும் எனக்கு கிடைக்கவில்லை. எனது கணவருக்கு என்ன நடந்தது எனக் கேட்டுக் கடந்த 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்தேன்.

அவர்கள் கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் தொடர்பு கொண்டு விசாரித்த போது அங்கே வரவில்லை எனப் பதில் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறையிட்ட போதும் அவ்வாறே பதில் வழங்கியுள்ளார்கள். அப்படியென்றால் என்ர கணவருக்கு என்ன நடந்தது? சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு உரிய பதில் வழங்க வேண்டும்.

இதுதொடர்பாக நேற்றைய தினம் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளேன். அவர்களும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் தொடர்பு கொண்டு விசாரித்து விட்டு அங்கு வரவில்லை எனப் பதிலளித்துள்ளதுடன் தாம் தேடிப் பார்க்கிறோம் எனவும் கூறியுள்ளார்கள்.

இன்று காலை வல்வெட்டித்துறைப் பொலிஸார் வீட்டுக்கு வந்து அவரது புகைப்படங்களைப் பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.

24 வருஷ காலமா கணவர் என்கூடத் தானிருக்கிறார். ஆனால்இ இதுவரை ஒரு பிரச்சினையும் கிடையாது. என்னை விட்டுவிட்டு ஒருகாலமும் அவர் பிரிந்திருந்ததே கிடையாது எனவும் கூறினார்.

எனக்கு ஒரு பொம்பளப் பிள்ளையும் இரண்டு ஆம்பளப் பிள்ளைகளும்…அவர்களில் இரண்டு பிள்ளைகள் இப்ப படிச்சுக் கொண்டிருக்கினம். எனது கணவர் ஓட்டோ ஓடிச் சம்பாதிச்சால் தான் எங்கள் வீட்டில் அடுப்பெரியும்.

அவர் அன்றாடம் உழைத்தால் தான் எங்களுக்குச் சாப்பாடு எனவும் அவர் கடும் வேதனை வெளியிட்டுள்ளார்.

எனது கணவர் இங்கு நிற்கும் போது ஏற்கனவே 7 பேர் தான் சிஜடி என்று கூறி விசாரித்துச் சென்றார்கள். இதன்பின்னர் தான் ரிஜடியிடமிருந்து இரண்டு கடிதங்கள் எனது கணவரை விசாரணைக்கு வருமாறு கோரி வந்திருந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post