ஆட்சி மாறியதால் பரிதாப நிலையில் பலாலி விமான நிலையம்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்கப்பட்ட பலாலி விமான நிலையம் கடந்த ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டு நவம்பர் 11 ஆம் திகதி தொடக்கம் சென்னை-யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை இடம்பெற்றிருந்தது.

கடந்த அரசாங்கத்தால் திறந்து வைக்கப்பட்ட குறித்த விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆட்சி மாற்றத்தின் பின்னர் முடங்கிப் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் மழை காலத்தில் பயணிகள் ஒதுங்கிக் கொள்வதற்கோ விமானத்தில் புறப்படுவதற்கு முன்னதாகவோ தங்கியிருக்க இட வசதிகள் இல்லை என விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அலையன்ஸ் எயர் நிறுவனம் வாரத்தில் மூன்று சேவைகளை நடத்துகின்றது. இதில் 50 தொடக்கம் 60 வரையான பயணிகள் பயணங்களை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் ஆசனங்கள் நிரம்புகின்றன. ஆனால் பயணிகளின் நிலைதான் பெரும் திண்டாட்டமாகவுள்ளது.

விமானப் பயணத்துக்குப் பயணிகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் புறப்படும் பகுதிக்கு அழைக்கும் வரை பயணிகள் மழையில் திறந்த வெளியில் நின்று முற்றிலும் நனைகின்றனர்.

கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதால் அனைத்து குறைபாடுகளையும் மீறி விமான நிலையம் ஒரே ஒரு கட்டடத்தில் மட்டும் செயற்பட்டு வருகின்றது.

Previous Post Next Post