“தற்கொலை செய்வேன்”… கைக்குழந்தையுடன் இளம் பெண் போராட்டம்! (படங்கள்)

கசிப்புக்கு எதிராக தனது 9 மாதக் கைக் குழந்தையுடன் 30 வயதுப் பெண் ஒருவர் தனிநபராக வீதியில் போராட்டத்தில் குதித்துள்ளார்.

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்தி கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காந்தி கிராமத்தில் கசிப்பு பாவனை அதிகரித்துள்ளது எனவும் இதனால் தன்னைப் போன்ற பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் காணப்படவில்லை. கசிப்பு பாவனையாளர்களால் அச்சமான நிலைமையே காணப்படுகின்றது.

குடும்பத்தில் நிம்மதி இல்லை. பாடசாலை பிள்ளைகள் நிம்மதியாகப் படிக்க முடியாதுள்ளது. குறிப்பாக பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகவுள்ளது.

வீடுகளின் வாசல்கள் வரை கசிப்பு விற்பனை வந்துவிட்டது. எப்போதும் மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள். இப்படி சொல்ல முடியாத அளவுக்கு கசிப்பு பாவனையால் அவலம் ஏற்பட்டுள்ளது.

எனவே இனியும் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே நான் எனது குழந்தையுடன் இம் முடிவுக்கு வந்துள்ளேன்.

எமது கிராமத்தின் கசிப்பு விடயம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் காவல்துறையினருக்கு அறிவித்தும் அவர்களால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post