கொரோனா சந்தேகநபர் சுட்டுக்கொலை! தடையை மீறியதால் வழங்கப்பட்ட தண்டனை!!

சீனாவை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது மெல்ல மெல்ல பிற நாடுகளுக்குள்ளும் ஊடுருவி வருகின்றது.

இதனால் தத்தம் நாடுகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அரசாங்கங்கள் தங்கள் நாடுகளுக்குள் பல்வேறு தடையுத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.

அந்த வகையில் வடகொரியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த வடகொரி அதிகாரி ஒருவர் தடையை மீறி பொதுகுளியல் அறையைப் பயன்படுத்தியதால் சுட்டுக் கொல்பப்பட்டார்.

நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உடன் சீனாவுக்குப் பயணம் செய்த பின்னர் இந்த அதிகாரி கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்தார்.

எனினும் கட்டுப்பாட்டை மீறி அந்த நபர் அந்நாட்டின் பொது இடத்தில் உள்ள குளியல் அறைக்கு சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து கொரோனா வைரஸ் பிறருக்கு பரவலாம் என அச்சம் வெளியிடப்பட்டது. இதையடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி உடனடியாக அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கொரிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கொரோனோ வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள எவரும் பொது வெளியில் நடமாட முயன்றால் அவர்கள் மீது இராணுவச் சட்டம் பிரயோகிக்கப்படும் என கொரிய அரசு முன்னரே எச்சரித்திருந்தது.

இந்த எச்சரிக்கையை மீறியதாலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை கொரோனோ தொற்றுக்கு உள்ளான ஒருவர் கூட தனது நாட்டில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என வடகொரியா கூறுகிறது. வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க சீனாவுடனான 880 மைல் நீளமுள்ள எல்லையில் கடும் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை வடகொரியா முன்னெடுத்து வருகிறது.

சீனாவில் இருந்து அண்மையில் வந்தவர்கள் மற்றும் சீனர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்கள் என இணங்காணப்பட்ட அனைவரும் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சீனாவுக்கு அண்மையில் பயணம் செய்து திரும்பிய அதிகாரி ஒருவர் அதனை மறைக்க முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டு வட கொரிய தூரதேச பண்ணைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை சீனாவுக்கு மிக அருகில் உள்ளதுடன் சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட வட கொரியாவில் இதுவரை ஒருவர் கூட கொரோனோ வைரஸ் தொற்றுக்கு ஆட்பட்டதாக உறுதிப்படுத்தப்படாதுள்ளமை குறித்து ஐ.நா மற்றும் உலக சுகாதார அமைப்பு என்பன சந்தேகம் எழுப்பியுள்ளன.

வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அத்துடன் ஊடகங்களுக்கும் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதால் இது குறித்த தகவல்களை சுயாதீனமான உறுதிப்படுத்த முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post