யாழ்ப்பாணத்தை அதிர வைத்த திருடர் குழு சிக்கியது எப்படி? (படங்கள்)

யாழ்ப்பாண நகர்ப் பகுதிகளில் அண்மைக் காலமாக இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவின் வழிகாட்டலில் விசேட குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி முனசிங்க தலைமையிலான குழுவினர் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அரியாலையில் உள்ள வீடு ஒன்று யாழ்ப்பாண பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த வீட்டில் தங்கியிருந்த 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 20 பவுண் தங்கம், நகைகளாகவும், உருக்கப்பட்ட நிலையிலும் மற்றும் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையிலும் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் வழிப்பறி மற்றும் நகைத் திருட்டுக்கள் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் குறித்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் 20 தொடக்கம் 25 வயது உடையவர்கள் எனவும் சந்தேக நபர்களை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.



Previous Post Next Post