யாழில் கூலி வேலைக்கு வந்தவர்களின் மோசடி! கட்டாயப்படுத்திப் பணம் பறிப்பு!!

யாழ்ப்பாணத்தில் கூலி வேலை செய்பவர்கள் போல் வீடுகளுக்கு வரும் நபர்கள் ஏமாற்றிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் இடம்பெறுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் தென்னை மர வட்டு மிதிப்பதாக குறைந்த கூலி பேசி வேலையைத் தொடங்கும் நபர்கள் வேலை முடிந்த பின் அதிக பணம் கேட்டு மிரட்டி பணத்தினைப் பெற்றுச் சென்றனர் என பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

திருநெல்வேலி தபால்பெட்டி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்ற இருவர் உங்கள் வீட்டு தென்னை மரத்தில் ஏறி வட்டினை மதிச்சு தருகிறோம் 300 ரூபாய் கூலி தாருங்கள் எனக் கோரியுள்ளனர்.

தென்னை வட்டு மிதிச்சால்தான் குலை விழும் எனவும் கூறியுள்ளனர். அதற்கு வீட்டார் தேவையில்லை என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இந் நிலையில் இன்றைய தினம் புதன்கிழமையும் அந்த வீட்டுக்கு மீளவும் சென்ற இருவர் தென்னையில் ஏறி வட்டு மிதிச்சு தாருகிறோம் 300 ரூபாய் தாருங்கள் என பேரம் பேசியுள்ளனர். இன்றைக்கு வீட்டு உரிமையாளரும் அதற்கு சம்மதித்துள்ளார்.

அதனை அடுத்து தென்னையில் ஏறி வட்டை மதித்தவர்கள் 15 நிமிடத்திற்குள் இறங்கி 2 ஆயிரத்து 300 ரூபாய் கூலி கேட்டுள்ளனர்.

அவர்களின் கூலியைக் கேட்ட வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்து 300 ரூபாய் தானே முதலில் பேசினீர்கள். அதற்குத் தான் நான் உடன்பட்டேன் எனக் கூறி 300 ரூபாயை கொடுத்துள்ளார்.

அதற்கு கூலிக்கு வந்த இருவரும் தாம் 2 ஆயிரத்து 300 ரூபாய்தான் கேட்டோம். அதற்கு நீங்கள் சம்மதித்ததால்தான் தென்னையில் ஏறினோம் என கூறி தமக்கு 2 ஆயிரத்து 300 ரூபாய் தந்தால்தான் வீட்டை விட்டு போவோம் எனக் கூறி வீட்டு வளவுக்குள் இருந்துள்ளார்கள்.

சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அவர்கள் இருவரும் வீட்டு வளவை விட்டு வெளியேறாமல் இருந்ததால் வீட்டின் உரிமையாளர் வேறு வழியின்றி அவர்கள் கேட்ட 2 ஆயிரத்து 300 ரூபாயினை கொடுத்து அவர்களை அனுப்பியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை பகல் வேளைகளில் வீடுகளுக்கு பழைய பொருட்கள் வாங்க எனவும், பொருட்கள் விற்க எனவும், கூலி வேலைகள் செய்து தருவதாகக் கூறியும், ஜோதிடம் மற்றும் ஆலயத்திற்குப் பணம் சேகரிக்க எனவும் வரும் ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், தெரியாத நபர்களை வீட்டு வளவினுள் அனுமதிப்பதை இயன்றவரை தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு வரும் சில நபர்கள் கண்காணித்து களவு மற்றும் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Previous Post Next Post