திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்! மக்களுக்கு எச்சரிக்கை!!

தீடீரென மயங்கி விழுந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கிளிநொச்சி சம்புக்குளம் கல்மடுப் பகுதியில் நேற்று (02) இடம்பெற்றுள்ளது.

கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட குறித்த பெண், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளமை அப் பகுதியை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

எனினும் அது சிறுநீர் தொற்று காரணமாக ஏற்பட்ட குறித்த வயிற்று வலி என எவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை.

இந் நிலையில் பிற்பகல் திடீரென மயங்கி விழுந்தவரை தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவரது இதயம் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.

தருமபுரம் வைத்தியசாலை ஊழியர்களால் கடுமையாக முயற்சித்து இதயத்தை மீள இயங்க வைத்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட இந்தத் தாயார் அவருக்கு ஏற்கனவே ஏற்பட்ட அதிக இரத்தப் போக்குக் காரணமாக அங்கு உயிரிழந்துள்ளார்.

இவரது கர்ப்பமானது கர்ப்பபைக்கு வெளியே தங்கியதால் வயிற்றறையில் ஏற்பட்ட திடீர் இரத்தப் போக்கே இந்த மரணத்திற்குக் காரணம் என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது கர்ப்பகால மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கர்ப்ப காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, தலைச்சுற்று முதலிய எந்த ஒரு அறிகுறிகளையும் கர்ப்பவதிகள் சாதாரணமாக எடுக்காமல் உடனடியாக தமது பகுதி குடும்ப நல உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொண்டோ அல்லது அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்குச் சொன்றோ ஆலோசனை பெற்று, கர்ப்ப காலங்களில் ஏற்படக் கூடிய இவ்வாறான அபாய நிலைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Previous Post Next Post