யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த கடிதம்! விசாரணைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்தில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு தபால் மூலம் வந்த மிரட்டில் கடிதம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் பணியாற்றும் பெண் உயர் அதிகாரி ஒருவருக்கே இந்த மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வலி தெற்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் பிரதேச சபையின் அனுமதி எதுவும் பெறாமல் கட்டடம் ஒன்று கட்டப்பட்டுவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த கட்டடத்திற்கு உரிய அனுமதியை பெறுமாறு பிரதேச சபையின் உப அலுவலகத்தில் பணியாற்றும் பெண் பொறுப்பதிகாரி கட்டட உரிமையாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இரண்டு, மூன்று தடவைகள் அறிவுறுத்தல் வழங்கியும் இன்றுவரை கட்டடத்திற்கான உரிய அனுமதி பெறப்படவில்லை. இந்நிலையில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி குறித்த கட்டடத்தை அப்புறப்படுத்த அனுமதியை சபையிடம் கோரியுள்ளார்.

குறித்த கோரிக்கைக்கு அமைவாக தவிசாளர் பிரதேச சபையின் உரிய அனுமதிகள் எவையும் பெறப்படாமல் அமைக்கப்பட்டுள்ளதால் குறித்த கட்டடத்தை அப்புறப்படுத்தமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையிலேயே வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்கு நேற்று முன்தினம் எச்சரிக்கை கடிதம் ஒன்று சென்றது. குறித்த கடிதத்தில் உடுவில் பகுதியில் அமைந்துள்ள உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரிக்கு எச்சரிக்கை விடும்வகையில் கடிதம் அமைந்துள்ளது.

அதில் "அதிகாரியான நீங்கள் தேவையில்லாத விடயங்களில் தலையிட வேண்டாம் அவ்வாறு தலையிட்டால் முன்னர் இருந்த பொறுப்பதிகாரிக்கு நடந்ததே உங்களுக்கும் நடக்கும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொறுப்பதிகாரி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளை சட்டவிரோதமாக கட்டப்பட்டுவந்த கட்டடத்திற்கு எதிராக அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்படும் போது இவ்வாறான மிரட்டல்கள் வருவதால் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


Previous Post Next Post