மந்திகை வைத்தியசாலை அத்தியட்சகர் பொறுப்பை கையளிக்க மறுப்பதால் குழப்பநிலை!

“மந்திகை – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன், இடமாற்றத்தை ஏற்று பொறுப்புக்களை இன்று செவ்வாய்க்கிழமை மாலைவரை ஒப்படைக்கவில்லை. அவர் தமது பொறுப்புக்களை நாளைக் காலை 8.30 மணிக்கு முன்னர் பதில் அத்தியட்சகரின் ஒப்படைக்கத் தவறின் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம்” இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களான பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

எனினும் மருத்துவர் த.குகதாசன் நாளைக் காலை தமது பொறுப்புக்களை ஒப்படைத்து, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்கு இடமாற்றலாகுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மந்திகை – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன் மீது நிர்வாக முறைகேடுகள் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு வசதியாக, விசாரணைகளில் அவரது தலையீடுகளை தவிர்ப்பதற்காகவும் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் பதவியிலிருந்து இடைநிறுத்தி, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்கு உடனடியாக இடமாற்றலாகுமாறு சுகாதார அமைச்சர் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

அதனால் பொறுப்புக்களை பதில் அத்தியட்சகரான மருத்துவர் கமலநாதனிடம் கையளிக்குமாறு மருத்துவர் த.குகதாசனுக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் பணிக்கப்பட்டது.

“மருத்துவர் த.குகதாசன் இன்று மாலை வரை பொறுப்புக்களை கையளிக்கவில்லை. இதனால் அவர் ஆவணங்களையும் சாட்சிகளையும் திரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாரோ என பலமான சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. நாளை காலை 8.30 மணிக்கு முன்பாக பதில் பணிப்பாளர் தனது பதவியை பொறுப்பேற்க வேண்டும். தவறும் பட்சத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றில் ஈடுபடுவது தவிர்க்க முடியாததொன்றாகிவிடும்” என்று அந்த வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
Previous Post Next Post