சற்றுமுன் வேலணையில் சரவணபவன் ஆதரவாளர்கள் அடாவடி! இளைஞன் மீது சரமாரித் தாக்குதல்!!

யாழ்.தீவகம், வேலணை, வங்களாவடிப் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைக்காகச் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் அப் பகுதி இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வேலணை, வங்களாவடிப் பகுதியில் உள்ள கடைகளுக்கு சரவணபவன் உட்பட அவரின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக இன்று மாலை சென்றுள்ளனர்.

அப்போது அப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துறையூர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பியுள்ளார்.


அதன்பின் எரிபொருள் நிரப்பு ஊழியர் பணத்தினைக் கேட்டபோது தன்னிடம் தற்போது பணம் இல்லை என தெரிவிக்க, இளைஞனுக்கும், ஊழியருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதற்கிடையில் வேலணை பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கருணாகரன் நாவலன் இடையில் புகுந்து அந்த இளைஞனுடன் வாக்குவதம் செய்ய, அது கைகலப்பாக மாறியது.

இதனைத் தொடர்ந்து சரவணபவனுடன் வந்த ஆதரவாளர்கள் குறித்த இளைஞனைச் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதில் குறித்த இளைஞன் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் பதற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post