யாழ். கொரோனா முடிவுகளை அறிவிக்கும் உத்தியோகபூர்வ அதிகாரி யார்? மக்களைக் குழப்பும் சத்தியமூர்த்தி?


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வடக்கில் கொரோனா தொடர்பான முடிவுகளை அறிவிக்கும் பொறுப்பை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனிடம் விடுவதே சரியானது. இதை செயற்படுத்துமாறு தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

மாறாக, யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி ஒருபுறமும் வடக்கு சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் இன்னொரு புறமும் அறிவித்தல் விடுப்பதானது மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்குகின்றது. இதுவே இன்று ஏற்பட்டது.
தயவுசெய்து மக்களை குழப்பாதீர்கள்.

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகின்றது.
கொரோனா விடயத்தில்
குழப்பங்கள் வேண்டாம்
ஒன்றுபட்டு செயற்படுங்கள்!


கொரோனா தொடர்பாக உண்மையான தகவல்களை மக்களுக்கு வழங்குவதன் மூலமே மக்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க முடியும். ஆனால், இன்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் ஆளாளுக்கு வெளியிட்ட தகவல்கள் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தன.

மருத்துவர் சத்தியமூர்த்தி இன்று சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு வெளியிட்ட முதலாவது பதிவு,

‘இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 300 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் மருதனார்மடத்தில் நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்டவரின் மனைவி மூன்று பிள்ளைகள் மற்றும் இரண்டு உறவினர்கள் அடங்குவார்கள். (அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பவர்கள்)
2 பேர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்பதிவு வெளிவருவதற்கு முன்பே மருதனார்மடத்தில் மாதிரி எடுக்கப்பட்டவர்களில் 31 பேருக்கு கொரோனா என தகவல்கள் பரவியிருந்தன. செய்தித் தளங்களில் வெளியாகிய அந்த தரவுகளின் அடிப்படையில் சமூக வலைத்தளங்களிலும் தகவல் வேகமாக பரவியது.

உடுவில் சுகதார வைத்திய அதிகாரி பணிமனையின் தகவல்களின்படி 384 பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டது, ஆனால், வைத்தியர் சத்தியமூர்த்தியின் தகவலின்படி பி.சி.ஆர் செய்யப்பட்டது 300 பேருக்கு. ஏனையோரின் நிலை என்ன? அவர்களின் முடிவுகள் ஏன் அறிவிக்கப்படவில்லை என்ற கேள்வி குழப்பத்திற்கு காரணமானது.

இக்குழப்பங்களுக்கு மத்தியில், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆக.கேதீஸ்வரனும் இது தொடர்பாக கருத்து வெளியிட்டார். அவரது கருத்து,

‘மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பி.சி.ஆர்.பரிசோதனை அறிக்கை நாளையே வெளிவரும்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள், தொடர்புடையவர்கள் என 394 பேரின் மாதிரிகள் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் தலைமையில் பெறப்பட்டன.

இன்று பெறப்பட்ட மாதிரிகளில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஏனையவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

இதில், நேற்று அடையாளம் காணப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பலரது மாதிரிகள் மீளவும் பெறப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படவேண்டும் என்று ஆய்வுகூடத்தால் குறிப்பிடப்பட்டவர்களின் மாதிரிகள் நாளை மீளவும் பெறப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்படும்’ என தெரிவித்தார்.

இதன் பின்னர், இரவு 9.30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டார், அதில்,
‘நாளைய தினமும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த பலருக்கு ஆய்வுகூட பரிசோதனைகள் செய்யப்படும்.

இன்றைய பரிசோதனை முடிவுகளுக்கு மேலதிகமாக உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளில் 104 பேருக்கான பரிசோதனை நாளை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நடைபெறும். இது தவிர 114 பேருக்கான மாதிரிகள் அனுராதபுர ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்யப்படும்.

தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது. இவர்களில் சிலருக்கு தொற்று இருக்கலாம் என எதிர்வு கூறப்பட்டாலும் எதிர்வரும் நாட்களில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் போது மாத்திரம் தொற்று எண்ணிக்கை பற்றி உறுதிபடக் கூற முடியும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையும் விளக்கமானதாக இல்லை. பி.சி.ஆர் பரிசோதனையின்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணாகவே பரிசோதனையை நாளை தினம் மீண்டும் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இந்நிலையில், மக்களுக்கு தகவல்களை இருட்டடிப்பு செய்வதானது அவர்களுக்கு கொரோனா தொடர்பான அச்சமற்ற நிலையை ஏற்படுத்தும். இன்று ஆரம்பத்தில் 31 என வந்த தகவல் மறுதலிக்கப்பட்டதானது மக்களுக்கு மனதளவில் கொரோனா செய்திகள் தொடர்பான நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தும். இந்த நிலமை கொரோனா கட்டுப்பாட்டிற்கு பெரும் தடையாக மாறும்.

எனவே, இங்குள்ள அவதானங்களின் அடிப்படையில், யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்திக்கும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனுக்கும் இடையே ஒற்றுமைத்தன்மை இல்லை அல்லது போட்டி ஏற்பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகின்றது.

எந்தவொரு முடிவுகளாயினும் ஒருவர் அதை அறிவிப்பதே முறையானது. வடக்கு மாகாண ரீதியான தகவல்களை அறிவிப்பது என்பதால் வடக்கு சுகாதாரப் பணிப்பாளரே கொரோனா தொடர்பான கள நிலவரங்களை அறிவிப்பதற்கு பொருத்தமானவர்.

இது யாருடைய சொந்த வேலையும் அல்ல. பொது மக்களின் உயிர்கள் சம்பந்தப்பட்டது. ஆட்கொல்லி நோய் தொடர்பானது. இவ்விடயத்தில் மருத்துவத்துறை ஓரணியாக நிற்கவேண்டும். யார் பெரியவர்கள் என்பதை நிரூபிக்க முற்பட்டால் இறுதியில் மயானத்தில் தீப்பிளம்புகள்தான் தோன்றும். மக்கள் அனைவரும் அந்தத்தீயில் சங்கமிப்பர்.

நன்றி
பிருந்தாபன் பொன்ராசா
Previous Post Next Post