யாழில் மேலும் மூவருக்குத் தொற்று! ஊர்காவற்றுறைக்கும் பரவியது கொரோனா!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மருதனார்மடம் கொரேனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று (டிசெ. 21) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் இவர்களுக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட11ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93ஆக உயர்வடைந்துள்ளது.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மருதனார்மடம் பொதுச் சந்தைக்குச் சென்று வந்துள்ளார். சுயதனிமைப்படுத்தப்பட்ட அவரிடம் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் மருதனார்மடம் சந்தைக்கு சென்று வந்தவர்.

அத்துடன், மருதனார்மடம் சந்தை தொற்றாளருடன் நேரடித் தொடர்புடைய உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட இணுவிலைச் சேர்ந்தவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட மூவரும் கடந்த ஒரு வாரத்து மேலாக குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட முதலாவது கோவிட் -19 தொற்று நோய்க் கொத்தணி இதுவாகும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 383 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 3 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. ஏனையோருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Previous Post Next Post