பிரான்ஸிலும் புதிய வைரஸ் பரவல்! பிரிட்டனில் 60 ஆயிரம் தொற்றுகள்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
"இங்கிலிஷ் வைரஸ்"என்று அழைக்கப் படும் மாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் (New variant of Covid) பாரிஸிலும் பரவி உள்ளது.

பாரிஸ் மருத்துவமனைகளின் பணிப்பாளர் நாயகம் Martin Hirsch இத்தகவலை "பிரான்ஸ் - 2" தொலைக் காட்சிக்குத் தெரிவித்திருக்கிறார்.

"பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள ஆய்வுக்கூடம் ஒன்றில் நோயாளி ஒருவருக்கு புதிய வைரஸ் கண்டறியப்பட்டது. அவர் தற்சமயம் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கிறார்" என்பதை மருத்துவமனை களின் பணிப்பாளர் நாயகம்(directeur général de l'Assistance publique - Hôpitaux de Paris) உறுதிப்படுத்தியுள்ளார். 

அதேசமயம் மாற்றமடைந்து பரவி வருகின்ற புதிய வைரஸ் பிரான்ஸின் பல பகுதிகளிலும் இதுவரை 15 பேருக்குத் தொற்றியிருப்பது உறுதியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பிரித்தானியாவில் நாடளாவிய பொது முடக்கம் அமுலுக்கு வருகின்ற நிலையில் அங்கு நேற்று 60 ஆயிரம் புதிய வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.

மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியதில் இருந்து கடந்த சில நாட்களில் 50 ஆயிரம் என்ற கணக்கில் இருந்துவந்த நாளாந்த தொற்று எண்ணிக்கை நேற்று மிக உச்ச அளவில் 60 ஆயிரத்து 961 ஆக அதிகரித்துள்ளது. 

அதேசமயம் மாற்றமடைந்து பரவி வருகின்ற புதிய வைரஸ் பிரான்ஸில் இதுவரை 15 பேருக்குத் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப் பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய வைரஸ் தற்போது பாவனைக்கு வந்துள்ள தடுப்பூசியை எதிர்த்து நிற்கும் தன்மை கொண்டதா என்று பிரான்ஸின் சுகாதார அமைச்சர் Olivier Véran அவர்களிடம் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் - 

"இது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக் கட்டம் வரை அறிவியலாளர்கள் தடுப்பு மருந்துகள் மீது மாற்றமடைந்த புதிய வைரஸ் சிறிதளவு தாக்கம் செலுத்தக் கூடும் என்று கருதுகிறார்கள். ஆயினும் நடைபெற்றுவரும் ஆய்வுகள் தடுப்பூசியின் வீரியத்தன்மை மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன" - என்று அமைச்சர் தெரிவித்தார். 

இதேவேளை பிரான்ஸில் வீடுகளில் தங்கி வாழும் மூதாளர்களுக்குத் தடுப்பூசி ஏற்றும் திட்டம் இம்மாத இறுதிக்குள் ஆரம்பிக்கும் என்று சுகாதார அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

மூதாளர் இல்லங்களில் வசிப்போருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஏற்கனவே ஆரம்பமாகி உள்ளன. 

மூதாளர் இல்லங்களுக்கு வெளியே வீடுகளில் தங்கி வாழும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அடுத்த கட்டமாக முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படவுள்ளது என்ற தகவலை அமைச்சர் வெளியிட்டார்.

தொற்று ஆபத்து மிகுந்தவர்கள் என்ற அடிப்படையில் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப்படைப்பிரிவுகளில் பணியாற்றுகின்ற 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் வீடுகளில் பராமரிப்புத் தொழிலில் ஈடுபடுவோருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடங்கி ஒருவாரம் கடந்துவிட்ட நிலையில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே இதுவரை அது செலுத்தப்பட்டிருக்கிறது. இதனை ஆமை வேகம் என்று வர்ணித்துள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் சுகாதார நிபுணர்களும் தடுப்பூசி விடயத்தில் அரசின் மெத்தனப்போக்கைக் கடுமையாகச் சாடிவருகின்றனர். 

சுகாதார நிலைமையை ஆராய்வதற்காக பாதுகாப்புச் சபைக் கூட்டம் இன்று புதன்கிழமை காலை எலிஸே மாளிகையில் நடைபெறவுள்ளது.

நாளை வியாழக்கிழமை மாலை பிரதமர் Jean Castex செய்தியாளர் மாநாட்டைக் கூட்டவுள்ளார்.
Previous Post Next Post