பிரான்ஸில் மாதக் கணக்கில் மூடிக் கிடக்கும் அருந்தகங்கள்! உரிமையாளர் தற்கொலை!! மக்ரோன் அனுதாபம்!!!


உணவகங்கள், அருந்தகங்கள் என்பன தொடர்ந்து மாதக்கணக்காக மூடிக்கிடக்கின்றன. அவற்றைச் சார்ந்த பல்லாயிரக் கணக்கானோர் தொழில் முடக்கம், வருமான இழப்பு, மனப்பாதிப்புகள் காரணமாக அவதிப்படுகின்றனர்.

பிரான்ஸின் கிழக்கு எல்லையோர மாவட்டமான Vosges என்னும் இடத்தில் பிரபல அருந்தகம் ஒன்றின் உரிமையாளர் சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

மிக நீண்ட காலமாக அங்கு இயங்கிவந்த 'Bar de Vagney' என்ற அருந்தகத்தின் உரிமையாளரான அவரது மரணம் அப்பகுதி வாசிகளைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

மரணத்துக்கான சரியான காரணம் தெரியாத போதிலும் வாடிக்கையாளரது நன்மதிப்பைப் பெற்ற தனது அருந்தகம் தொடர்ந்து நீண்ட நாட்கள் மூடிக்கிடப்பதால் அவர் மனமுடைந்து காணப்பட்டார் என்று கூறப்படுகிறது.

இடையில் அருந்தகங்கள் வெளி இருக்கைகளில் இயங்க அனுமதிக்கப் பட்டிருந்த சமயத்தில் சுகாதார விதிகள் சரிவரப் பின்பற்றப்படவில்லை என்ற காரணத்துக்காக அவரது அருந்தகத்தை பொலீஸார் மூடியிருந்தனர் என்றும் கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட விரக்தியாலேயே அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

அருந்தக உரிமையாளரது அவல மரணம் குறித்து நாட்டின் அதிபர் மக்ரோன் தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார். 

எலிஸே மாளிகையில் இந்த வாரம் நடந்த பாரம்பரிய "கலத் றுவா "(galette des rois) என்ற 'பான் கேக்' பரிமாறும் நிகழ்வில் பங்குகொண்ட பிரபல உணவகங்கள் , பேக்கரிகளின் உரிமையாளர்கள் மற்றும் சமையலாளர்களுடன் கலந்துரையாடிய சமயத்திலேயே மக்ரோன் இந்த மரணம் தொடர்பான தனது அனுதாபத்தை வெளியிட்டிருக்கிறார்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக உணவகங்கள், அருந்தகங்கள், ஹொட்டேல்கள் போன்றன தொடர்ந்து மூடப்பட்டிருப்பது குறித்து அச்சமயம் தனது கவலையைப் பரிமாறிய மக்ரோன், 

முடிந்தளவு விரைவில் அவற்றைத் திறக்க விருப்பம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஒக்ரோபரில் அதிபர் அறிவித்த கால அட்டவணைப்படி உணவகங்கள் ஜனவரி 20 ஆம் திகதி திறக்கப்பட மாட்டாது என்பது உறுதியாகி உள்ளது. வைரஸ் நெருக்கடி தீவிரமடைந்து செல்வதால் அதற்கான திகதி வரும் ஏப்ரல் மாதம் வரை பிற்போடப்படலாம் என்றே மதிப்பிடப்படுகிறது.

குமாரதாஸன், பாரிஸ்.
Previous Post Next Post