கோணாவிலில் இடம்பெற்ற கொலைவெறிச் சம்பவம் தொடர்பில் வெளியான பரபரப்பு பிண்ணனி! (படங்கள்)

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி, உருத்திரபுரம் கிராமத்து இளைஞர்கள் சிலரை கோணாவில் பிரதேச இளைஞர்கள் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது,

இதுகுறித்து கோணாவில் பிரதேச மக்கள் தெரிவித்தது,

தம்மீது தாக்குவதற்கு உருத்திரபுர குழு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தே ஆயுதங்களை கொண்டுவந்ததாகவும் கூறுகிறார்கள்.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது,

கோணாவில் - கிளிநொச்சி இரண்டு ஊர் இளைஞர்களிற்கிடையிலான பல வருடங்களாக பிரச்சனை நிலவி வருவது தெரியவந்துள்ளது.

கடந்த 8ஆம் திகதி இரவு. கிளிநொச்சியின் கோணாவில் கிராமத்திற்குள் ஒருவர் மீது தாக்குதல் நடத்த சென்ற உருத்திரபுரம் கிராம இளைஞர்கள் சிக்கி சின்னாபின்னமாகியிருந்தார்கள். அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்கள் அடித்துக் கொத்தி, பிரிக்கப்பட்டன.

ஏன் இந்த கொலைவெறிச் சம்பவம் நடந்தது?

வழக்கமான எல்லா குழு மோதல்களின் பின்னாலும் இருப்பதை போல சாதாரண சம்பவமொன்றுதான். ஒரு ஆட்டினாலேயே இவ்வளவு அக்கப் போர் நடக்கிறது.

ஒரு தரப்பின் ஆட்டை மறு தரப்பினர் அடித்து சாப்பிட்டதாக ஏற்பட்ட தகராறு, தீராத குழு மோதலாக மாறியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இரு தரப்பிற்கும் மோதலாகி, அது நீதிமன்றம் வரை சென்று, வழக்கு நிலுவையில் உள்ளது.

வெளிநாட்டிலிருந்து சில காலத்தின் முன் இலங்கை வந்த உருத்திரபுர நபரொருவரும் இந்த மோதலில் சிக்கியுள்ளார். விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளதால் அவர் வெளிநாடு செல்ல முடியாத நிலைமையில் இருக்கிறார்.

நிலைமையை சமாளித்து பிரச்சனையை தீர்க்க சமரச முயற்சிகளும் நடந்ததாக சொல்கிறார்கள். ஆனால் பின்னர் ஏனோ அது நடக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி இரவு, கோணாவில் கிராமத்தில் மறுதரப்பு நபர் ஒருவரை தாக்க உருத்திரபுரம் இளைஞர்கள் குழு சென்றுள்ளது.

6 மோட்டார் சைக்கிள்களில் வாள்கள், இரும்புகள் போன்ற வழமையான ரௌடிக்குழு ஆயுதங்களுடன் பெப்பர் ஸ்பிரேயும் கொண்டு சென்றுள்ளனர். இந்த குழு தாக்குதலிற்கு வரப் போவதை, கோணாவில் இளைஞர்கள் எப்படியோ அறிந்து விட்டனர். இதையடுத்துத்தான், உள்ளே விட்டு அடித்துள்ளனர்.

கோணாவிலில் அவர்கள் யாரை குறிவைப்பார்கள் என்பதை ஊகித்தறிந்த இளைஞர்கள், அன்றிரவு வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். வீட்டை சூழ, கொட்டான்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மறைந்திருந்தனர்.

விடயத்தை அறியாத உருத்திரபுர இளைஞர்கள், குறிப்பிட்ட வீட்டின் முன் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு, தாக்குதல் நடத்த வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

கோணாவில் இளைஞர்கள் வீதிக்கு வந்து மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து, உருத்திரபுர இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். எதிர்பாராமல்- பின் பகுதியில் அடி விழுந்ததில், உருத்திரபுர இளைஞர்கள் வெலவெலத்து விட்டனர். துண்டைக்காணோம் துணியை காணோம் என திசைக்கு ஒருவராக தலைதெறிக்க தப்பியோடி விட்டனர்.

அவர்கள் வந்த 6 மோட்டார் சைக்கிள்களும் அடித்து உடைக்கப்பட்டு, கொத்திப் பிரிக்கப்பட்டுள்ளன. உருத்திரபுர இளைஞர்கள் தலைதெறிக்க தப்பியோடிய போது, கொண்டு வந்த ஆயுதங்களையும் போட்டுவிட்டே ஓடினர். வாள்கள், இரும்புகளுடன், பெப்பர் ஸ்பிரேயும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பெப்பர் ஸ்பிரேயை உருத்திருபுர இளைஞர்கள் கொண்டு வந்தது, இப்பொழுது விடயத்தை தீவிரமாக்கியுள்ளது. இந்த விவகாரத்தை சாதாரணமாக விட முடியாதென பொலிசாரும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பொலிசாரின் தேடுதல் வலயத்தில் உள்ள ஒருவரின் உறவினர் அண்மையில் வெளிநாட்டிலிருந்து (ஐரோப்பிய நாடு) வந்திருந்தார்.

அவர் நாட்டுக்கு வரும் போது அவற்றை கொண்டு வந்தாரா என்ற கோணத்திலும் ஆராய்ந்து வருகிறார்கள். விடயத்தை சீரியசாக எடுத்து, பொலிசார் விசாரணையை தொடங்கியதும், தாக்குதலிற்கு வந்த உருத்திரபுரம் இளைஞர்கள் தலைமறைவாகி விட்டனர்.

தலைமறைவாக உள்ளவர்களை பொலிசார் தேடி வருகின்றனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பொலிசாரின் தேடப்படுபவர்களின் பட்டியலில் உள்ளவர்களில் ஒருவர், இலங்கை தமிழ் அரசு கட்சியின் உருத்திரபுரம் அமைப்பாளர்.


Previous Post Next Post