நபியின் கேலிச் சித்திரத்தை வரைந்த சுவீடன் கலைஞர் வீதி விபத்தில் பலி!


  • குமாரதாஸன், பாரிஸ்.
நபியின் கேலிச் சித்திரத்தால் உலகஅளவில் அறியப்பட்டவராகத் திகழ்ந்த சுவீடன் நாட்டின் கேலிச் சித்திரக் கலைஞர் லார்ஸ் வில்க்ஸ்(Lars Vilks) வீதி விபத்துச் சம்பவம் ஒன்றில் உயிரிழந்துள்ளார். அவர் பயணம் செய்த பொலீஸ் வாகனம் பார ஊர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்படுகிறது.

சுவீடனின் தெற்கு நகரமான Markaryd பகுதியில் இன்று நடந்த அந்த விபத்தில் அவருடன் பயணம் செய்த மெய்க்காவல் உத்தியோகத்தர்கள் இருவரும் உயிரிழந்தனர்.விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை விபத்துக்குள்ளான வாகனம் உடனே தீப் பற்றியதாகக் கூறப்படுகிறது.பொலீஸார் உடனடியாக அந்தப் பகுதியை மூடி விசாரணைகளை மேற்கொண்டனர்.

லார்ஸ் வில்க்ஸ் பயணம் செய்த சிவில் பொலீஸ் வாகனம் அதன் டயர் வெடித்த காரணத்தால் வீதியின் மறு பக்கத்தை நோக்கி வேகமாக இழுத்துச் செல்லப்பட்டது என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

2007 ஆம் ஆண்டில் முஹமது நபியை ஒரு நாயின் உருவத்தில் சித்தரித்து லார்ஸ் வில்க்ஸ் தீட்டிய கேலிச் சித்திரம் உலகம் எங்கும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.நபியின் உருவத்தை வரைவதைப் பெரும்பாலான முஸ்லீம்கள் மத நிபந்தனையாகக் கருதி அதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

லார்ஸ் வில்க்ஸ் வரைந்த சித்திரத்தின் காரணமாக அவரது உயிருக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அவரைக் கொல்லப்போவதாக இஸ்லாமியக் கடும்போக்காளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.அல்கெய்டா இயக்கம் அவரது தலைக்கு சன்மானம் அறிவித்திருந்தது. அதனால் அவர் அன்று முதல் இறக்கும் வரை 24 மணிநேர பொலீஸ் பாதுகாப்புடன் தனது வாழ்நாளைக் கழிக்க நேர்ந்தது.

2010 இல் அடையாளம் தெரியாத நபர்கள் தெற்கு சுவீடனில் உள்ள அவரது வீட்டை எரிக்க முயன்றனர். 2015 இல் டென்மார்க் தலைநகரில் (Copenhagen) லார்ஸ் வில்க்ஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக நம்பப்பட்ட தாக்குதலில் டெனிஷ் திரைப்பட இயக்குநர் ஒருவர் உயிரிழந்தார்.
Previous Post Next Post