யாழ்.கல்வியங்காடு பொதுச் சந்தைக்குப் புதிய கடைத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டி வைப்பு! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு (நல்லூர் செங்குந்த) பொதுச் சந்தைக்கான புதிய கடைத் தொகுதி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கல்வியங்காடு பொதுச் சந்தையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியை தவிர்க்கும் முகமாக இப் புதிய கடைத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் யாழ்.மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர், உறுப்பினர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும்  நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் தெ.கிரிதரன், அரசியல் பிரமுகர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை தற்போதுள்ள சந்தைக் கட்டடத் தொகுதி கடந்த கால மாநகர சபையின் ஆட்சியில் கட்டப்பட்டிருந்தது. எனினும் மரக்கறி விற்பனைப் பகுதி மற்றும் மீன்கள் விற்பனைப் பகுதிகளின் இட ஒதுக்கீடுகள் சிறந்த திட்டமிடலுடன் அமைக்கப்படவில்லை என பொதுமக்களும் வியாபாரிகளும் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மீன்கள் விற்பனைப் பகுதியில் மக்கள் அதிகளவில் வருகை தருகின்றபோதும் அதன் இட ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்பதால் கடும் நெரிசல் ஏற்படுகின்றது.

இந் நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார சூழ்நிலைகளில் ஆபத்தான ஒன்றாகக் காணப்படுகின்றது.

ஆனால் மரக்கறி விற்பனைப் பகுதியில் மக்கள் அதிகளவில் கூடுவதில்லை. இருந்தும் அதற்கு அதிகளவான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே இச் சிரமங்களைக் கருத்தில் கொண்டே புதிய கடைத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post