துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஜப்பானிய முன்னாள் பிரதமர் உயிரிழப்பு!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்ததாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த 67 வயதான அபே, பிரசார உரையின் போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்ததாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அபே மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 40 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு ரயில் நிலையத்திற்கு வெளியே அபே உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. தொடர்ந்து அந்தப் பகுதியில் வெண்மையான புகை மூட்டம் காணப்பட்டது என்று என்.எச்.கே. தெரிவித்துள்ளது.

அபேயின் உரையின் போது தொடர்ச்சியாக இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக சம்பவ இடத்தில் இருந்த என்.எச்.கே. செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

உடல் நலக்குறைவை காரணம் காட்டி 2020 இல் அபே ஜப்பான் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதற்கு முன் அவர் இரண்டு முறை பிரதமராக பதவி வகித்தார்.

தற்போதும் ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சி (LDP) கட்சியில் அபே செல்வாக்கு செலுத்தி வருகிறார்.

அவரது ஆதரவாளரான தற்போதைய பிரதமர் மந்திரி புமியோ கிஷிடா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு மேல்சபைத் தேர்தலை எதிர்கொள்கிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக அபே பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவ்வாறான ஒரு பிரச்சாரத்தில் அவர் இன்று காலை ஈடுபட்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஷின்சோ அபே உயிரிழந்தார். 
Previous Post Next Post