பிரான்ஸில் எரிபொருள் போன்று முடங்கப்போகும் பல துறைகள்! உளவுச் சேவை எச்சரிக்கை!!

பிரான்ஸில் மக்கள் கிளர்ச்சி மற்றும் பணிப் புறக்கணிப்பு என்று எதிர்வரும் வாரங்களில் பல தொழில்துறைகள் முடங்கக் கூடிய ஏது நிலை காணப்படுவதாக உள்நாட்டு உளவு சேவை எச்சரித்திருக்கிறது.

பணவீக்கம் விலைவாசி உயர்வு, எரிபொருள் நெருக்கடி என்பன நாளாந்த வாழ்வில் பெரும் தாக்கத்தைச் செலுத்தி வருவதால் சம்பள உயர்வு கேட்டும், நிவாரணங்கள் கோரியும் வேலை நிறுத்தங்களில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முயன்று வருகின்றன. நாட்டின் எண்ணெய் எரிபொருள் குதங்களின் பணியாளர்கள் அவற்றின் செயற்பாடுகளையும் எரிபொருள் விநியோகங்களையும் முடக்கிப் போராட்டம் நடத்தி வருவதால் நாட்டில் என்றும் இருந்திராத வகையில் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு தோன்றியுள்ளது. அது கடைகளுக்கான உணவுப் பொருள் விநியோக சேவைகளையும் பாதித்துள்ளது.

இரண்டு பிரதான எரிபொருள் கம்பனிகளில் ஒன்றாகிய டோடெல்எனர்ஜி (TotalEnergies) ஊழியர்களது கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு முதல் ஏழு சதவீத சம்பள அதிகரிப்புக்கு இணங்கியுள்ளது. ஆயினும் போராட்டத்துக்காக அழைப்பு விடுத்த பிரதான கடும் போக்குத் தொழிற்சங்கம் (CGT Union) அதனை ஏற்க மறுத்துப் பேச்சுக்களில் இருந்து விலகி உள்ளது. இரண்டாவது ஜாம்பவான் கம்பனியான எக்ஸ்ஸொன்மெபைல் (ExxonMobil) வேலை நிறுத்தத்தால் முடங்கியுள்ள அதன் எரிபொருள் குதங்களில் எண்ணெய்ச் சுத்திகரிப்புப் பணிகள் வழமைக்குத் திரும்புவதற்கு இன்னமும் இரண்டு மூன்று கிழமைகள் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டில் பெற்றோல், டீசல் நெருக்கடி தொடர்ந்து நீடிக்கிறது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வெளியே நெரிசல்களும் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன.

வேலை நிறுத்தங்களால் உருவாகியுள்ள நிலைமையைப் பயன்படுத்தி அரசுக்கு எதிரான எழுச்சி இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்ப இடதுசாரிகள் தயாராகி வருகின்றனர்.

விலைவாசி உயர்வுக்கு எதிரான முதலாவது பெரும் நாடளாவிய அரச எதிர்ப்புப் பேரணி நாளை ஞாயிற்றுக்கிழமை (ஒக. 16) நடைபெறவுள்ளது. அதேசமயம் பிரான்ஸின் ரயில்வே ஊழியர்கள், சிவில் பணியாளர்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற பிரதான தொழிற்சங்கம், எண்ணெய்க் குதங்களின் பணியாளர்களது போராட்டத்துக்கு ஆதரவாக எதிர்வரும் செவ்வாயன்று (ஒக்.18)பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, ஊடகங்களில் கசிந்துள்ள உள்நாட்டுப் புலனாய்வு சேவையின் ரகசிய அறிக்கை ஒன்று எரிபொருள் சேவை ஊழியர்களைத் தொடர்ந்து துறைமுகம், கப்பல் சேவைகள் மற்றும் அணு மின் நிலையப் பணியாளர்கள் உட்பட மேலும் பல தொழிற்துறையினர் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான தொழிற்சங்க நடவடிக்கைகளில் குதிக்கக் கூடும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
Previous Post Next Post