யாழில் 104 பேருடன் கரையொதுங்கிய அகதிகள் படகு! (படங்கள்)

யாழ்ப்பாணம் - மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 104 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் உடுத்துறைக்கும், சுண்டிக்குளத்திற்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் நேற்று மாலை அகதிகள் படகொன்று அவதானிக்கப்பட்டது. கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் அந்த படகை அவதானித்தனர்.

தாம் மாலைதீவை சேர்ந்தவர்கள் என்றும், தொடர்ந்து படகு பயணத்தை தொடர உதவிபுரியுமாறும் கேட்டுக் கொண்டனர். மீனவர்கள் இது தொடர்பில் கடற்படையினருக்கும், கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினருக்கும் அறிவித்தனர்.

அங்கு கடற்படையினர், உள்ளூர் மீனவர்கள் சென்றனர். இதன் பின்னர், படகில் இருந்தவர்கள் மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் என்பது தெரிய வந்தது. மியான்மரில் மிகப்பெரிய இனஅழிப்பிற்குள்ளாகும் ரோஹிங்கியாக்கள் சமகால உலகின் மிக துன்பப்படும் இனங்களிலொன்றாகும்.

படகிலிருந்தவர்கள் முரணான தகவல்களை தொடர்ந்து வழங்கினர். அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டதாகவும், மலேசியா செல்ல முற்பட்டதாகவும் பல்வேறு தகவல்களை வழங்கினர். சிலர் தாம் இலங்கைக்கு வந்ததாகவும் குறிப்பிட்டனர்.

படகில் 104 பேர் அளவில் இருப்பதாக கருதப்படுகிறது. மிக மோசமாக பழுதடைந்த படகில் உயிரை பணயம் வைத்து இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

அவர்கள் எந்த நாட்டிற்கு புறப்பட்டார்கள் என்பது உறுதியாகாத நிலையில், அவர்களை கரைக்கு அழைத்துச் செல்லும் பணி முன்னெடுக்கப்படுகிறது. நேற்று இருள் சூழ்ந்து விட்டதாலும், மோசமான கடல் நிலைமை காரணமாகவும் மீட்புப்பணி தாமதிக்கப்பட்டது.

இந் நிலையில் இன்று காலை கடற்படையினர் அவர்களின் படகை கட்டி இழுத்துக் கொண்டு காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
Previous Post Next Post