“மியான்மரில் வாழ முடியாது” பாதுகாப்பான வாழ்க்கைக்கு உதவுங்கள்! யாழில் கரையொதுங்கிய அகதிகள் கோரிக்கை!! (படங்கள்)

யாழ் கடற்பகுதியில் படகொன்றில் தத்தளித்த மியான்மர் பிரஜைகள் 104 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் தம்மை பாதுகாப்பான நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மியான்மரில் வாழ முடியாத நிலையில் தாங்கள் மலேசியா நோக்கிப் பயணித்தாகத் தெரிவித்த அகதிகள், தங்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தாங்கள் மலோசியாவில் தஞ்சமடைய உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 104 ரோஹிங்கியா அகதிகள் பாதுகாப்பான வாழ்க்கை தேடி மலோசியாவுக்கு ஆபதான கடல் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்ற படகு பழுதடைந்து நேற்று மாலை யாழ்.வடமராட்சி கிழக்குக் கடற்பரப்பில் கரை ஒதுங்கினர்.

அவர்கள் இன்று காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரபட்டுள்ளனர். அவர்களுக்கு கடற்படையினரால் உணவு வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதில் ஒரு சிறுவனுக்கு கையில் காயம் காரணமாகவும் மற்றுமொருவர் உணவு உண்ணாமையால் சுகாவீனமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுவனுடன் அவனது தாயும் வைத்தியசாலையில் உள்ளார். 

வெற்றிலைகேணிக்கு வடக்கே சுமார் 3.5 கடல் மைல் தொலைவில் உள்ள இலங்கைக் கடற்பரப்பில் பயணிகள் படகில் இருந்த 104 மியான்மர் பிரஜைகளை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டனர்.

இலங்கை கடற்படையின் உதாரா மற்றும் 04 வது விரைவுத் தாக்குதல் கப்பல்கள் மூலம் இந்த வெளிநாட்டவர்கள் காப்பாற்றப்பட்டனர்.


Previous Post Next Post