ஆர்ப்பாட்டங்களில் பரவலாக வன்முறை! பாரிஸில் பிரபல உணவகத்துக்குத் தீ! அடுத்த பேரணி 13 இல்...!!!

ஓய்வூதியச் சட்டத்தை எதிர்த்து நேற்று பதினொராவது தடவையாக நடைபெற்ற வீதிப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் மக்கள் பங்களிப்பு முன்னைய தடவைகளை விடச் சிறிது குறைந்து காணப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன .

எது எவ்வாறாயினும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நிறுத்தப் போவதில்லை என்று தொழிற்சங்கங்கள் சூளுரைத்துள்ளன. அடுத்த 12 ஆவது கட்ட வேலை நிறுத்தமும் பேரணிகளும் எதிர்வரும் 13 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய பேரணிகளில் நாடு முழுவதும் இருபது லட்சம் பேரும் தலைநகர் பாரிஸில் நான்கு லட்சம் பேரும் அணி திரண்டனர் என்று தொழிற்சங்கங்களின் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாரிஸிலும் லியோன் மற்றும் முக்கிய நகரங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்றுள்ளன.

லியோன் நகரில் வர்த்தக நிலையம் ஒன்று சூறையாடப்பட்டது. வங்கிகள், பஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. குப்பைக் கொள்கலன்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களது போராட்டங்களின் நடுவே புகுந்து வன்முறையில் ஈடுபட்ட சில கும்பல்களைக் கட்டுப்படுத்தப் பொலீஸார் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகித்தனர்.

பாரிஸில் பிரபல பாரம்பரிய பிரெஞ்சு உணவகம் ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டது. நகரின் ஆறாவது நிர்வாகப் பிரிவில் (VIe arrondissement) மொபானாஸ் வட்டகையில்(quartier de Montparnasse) அமைந்துள்ள "லா ரொத்தோன்ட்" (La Rotonde) எனப்படும் உணவகத்தின் வெளி இருக்கைக் கூரைப் படங்குக்கு விசமிகள் தீ மூட்டினர். எனினும் மோட்டார் சைக்கிள் தீ அணைப்புப் பிரிவினர் அங்கு விரைந்து வந்து தீ மேலும் பரவுவதைத் தடுத்து விட்டனர்.

சுமார் முந்நூறு பேர் கொண்ட"கறுப்புக் கும்பல்" ஒன்று உணவகத்தைத் தாக்கியதுடன் அதற்குத் தீ மூட்டியது என்று பொலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகரில் மிகப் பழமை வாய்ந்த பாரம்பரிய உணவகம் மற்றும் மது அருந்தகம் அடங்கிய அந்தக் கடைத் தொகுதி இதற்கு முன்னரும் மஞ்சள் மேலங்கிப் போராட்டங்களின் போது இலக்கு வைத்துச் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மக்ரோன் 2017 இல் அதிபர் தேர்தலின் முதற் சுற்றில் வெற்றி பெற்றதை அடுத்துத் தனது ஆதரவாளர்களுடன்"லா ரொத்தோன்ட்" (La Rotonde) உணவகத்திலேயே ஒன்று கூடித் தனது வெற்றியை ஆரவாரமாகக் கொண்டாடியிருந்தார்.

அன்று முதல் அது மக்ரோனின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அதன் காரணமாகவே எதிர்ப்பாளர்களால் அந்த உணவகம் அடிக்கடி இலக்குவைக்கப்பட்டு வருகிறது.

பாரிஸ் வன்முறைகளில் பொலீஸார் உட்பட 75 பேர்வரை காயமடைந்தனர். அவர்களில் 13 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். உள்துறை அமைச்சு வெளியிட்ட தகவலின் படி நாடெங்கும் வன்முறைகளில் ஈடுபட்ட 111 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை- பிரான்ஸின் சோசலிஸக் கட்சி நேற்றைய பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கின்ற ருவீற்றர் பதிவில், அரசுக்கு எதிரான போர் கடைசிவரை தொடரும் என்றும் மக்ரோனும் பிரதமர் எலிசபெத் போர்னும் ஓய்வூதியத் திட்டத்தை மீளப் பெறும் வரை போராட்டம் இடைவிடாது தொடர்ந்த முன்னெடுக்கப்படும் - என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பாரிஸ் நகரில் முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களில் ஒன்றாகிய "Arc de Triomphe" எனப்படுகின்ற வெற்றி வளைவின் உச்சியில் "64 வயது வேண்டாம்" என்ற சுலோகம் எழுதப்பட்ட பாரிய பதாகை ஒன்றைத் தொழிலாளர்கள் கட்டியுள்ளனர்.

பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பின் (CGT) கலை கலாசாரம், பொழுது போக்குத்துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை வெற்றி வளைவின் முன்பாகத் திரண்டு சில மணி நேரம் ஓய்வூதியச் சட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அச்சமயத்திலேயே வளைவின் மேற் பகுதியில் ஏறிய ஒருவர் அங்கு "64, c’est non !" (64 வேண்டாம்) என்று எழுதப்பட்ட பதாகையைக் கட்டினார். அதனால் அங்கு ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து வெற்றி வளைவுப் பகுதியை மூடிய பொலீஸார் அதனைப் பொதுமக்கள் பார்வையிடுவதை நண்பகல் வரை தடை செய்திருந்தனர்.
Previous Post Next Post