பிரான்ஸ் தொழிற்சாலையில் அமோனியாக் கசிவால் பதற்றம்! பாடசாலைகள் மூடப்பட்டு பலர் வீடுகளில் முடக்கம்!!

பாரிஸ் புறநகரான மேசோன் அல்போ வில் (Maisons-Alfort- Val-de-Marne) அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் அமோனியாத் திரவக் கசிவு ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் இன்று அதிகாலை முதல் சிவில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

சில பாடசாலைகள் மூடப்பட்டன. அயலில் வசிக்கின்ற சுமார் 500 பேர் வீடுகளுக்குள் இருக்குமாறு முடக்கப்பட்டனர். அதனால் அங்கு பதற்றம் நிலவியது.

பாண் மற்றும் உணவுப் பொருள்கள், சாராயம் என்பவற்றை நொதிக்க வைக்கப் பயன்படுத்தும் இயற்கை நுரைமம் (ஈஸ்ட் - yeast) தயாரிக்கின்ற 'பயோஸ்பிறிஞ்சர்' (Biospringer) கம்பனியின் தொழிற்சாலை ஒன்றிலேயே அமோனியாக் கலவை சேமிப்புத் தாங்கியில் கசிவு ஏற்பட்டது.

அங்கு இடம்பெற்ற வெல்டிங் வேலைகளை அடுத்தே வியாழக் கிழமை இரவு தாங்கி ஒன்றில் இருந்து அமோனியா திரவக் கலவை கசியத் தொடங்கியது. அச்சமயம் வாயுவை சுவாசித்த பணியாளர்கள் இருவர் மயக்கமடைந்தனர். எரிகாயங்களும் ஏற்பட்டன. தீயணைப்புப் படையினர் சுமார் எழுபது பேர் அங்கு விரைந்து வாயுத் தடுப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தாங்கியில் கசிவை இரவு முழுவதும் நிறுத்த முடியவில்லை.

வல்-து-மான் பொலீஸ் தலைமையகம் (Val-de-Marne prefecture) நகரசபை நிர்வாகத்துடன் இணைந்து இரவோடு இரவாகத் தொழிற்சாலை அமைந்துள்ள பிரதேசத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அறிவித்தது. தொழிற்சாலையைச் சூழவுள்ள 100 மீற்றர்கள் சுற்றளவுப் பகுதி ஆட்கள் பிரவேசிக்காதவாறு மூடப்பட்டது.

அருகே அமைந்துள்ள பாடசாலைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பகங்கள், விளையாட்டுப் பயிற்சி மையங்கள் இன்று வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.

அவை வருமாறு :
  • Le collège Nicolas de Staël
  • Le groupement scolaire Georges Pompidou
  • L'école Victor Hugo
  • L'école Saint-François
  • La crèche Charles Perrault
  • L’école Saint-François
  • Le Conservatoire Municipal Henri Dutilleux
  • La Mission Locale
  • La Maison pour Tous Pompidou
  • Le Gymnase Pompidou
தேதமடைந்த தாங்கியில் இருந்து அமோனியாக் கலவைவைப் பாரிய பவுஸர் வாகனங்களுக்குப் பாய்ச்சும் அவசரகாலச் செயற்றிட்டம் அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரசாயனக் கலவைகள் மற்றும் வாயு என்பவற்றை உறிஞ்சி வெளியேற்றிச் சேமிக்கும் நிறுவனம் ஒன்று (pumping company) அந்தப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளது.

அந்த வேலைகள் இன்று நண்பகல் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக அமோனியா வாயுவால் கண் மற்றும் தோல் எரிவு, மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பாதிப்புகள் மயக்கம் என்பன ஏற்படலாம்.
Previous Post Next Post