பிரான்ஸில் மெற்றோ ரயிலில் மோதுண்டு ஆணும் பெண்ணும் பலி!போதையில் தண்டவாளப் பகுதியில் இறங்கி வாய்த்தர்க்கம்?

பாரிஸ் நகரின் மெற்றோ 13 வழித்தடத்தில்(la ligne 13) நேற்றுப் புதன்கிழமை நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண்ணும் ரயில் மோதியதால் உயிரிழந்தனர். பாரிஸ் 14 ஆவது நிர்வாகப் பிரிவில் அமைந்துள்ள Gaîté ரயில் நிலையத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

பொலிஸ் தகவல்களின் படி உயிரிழந்தவர்கள் ஓர் ஆணும் பெண்ணும் என்றும் மது போதையில் இருப்பவர்கள் போன்று தோற்றமளித்த இருவரும் ரயில் மேடையை விட்டுத் தண்டவாளப் பகுதிக்குள் இறங்கி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த வேளையே மெற்றோ ரயிலில் மோதுண்டனர் என்றும் சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரும் வீட்டற்றவர்களாக இருக்கலாம் என்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இரவைக் கழிப்பவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நள்ளிரவு தாண்டி 45 நிமிட நேரத்தில் Châtillon முடிவிடத் திசையில் (direction de Châtillon) பயணித்த மெற்றோ ரயில் ஒன்றே Gaîté நிலையத்தில் இருவரையும் மோதியுள்ளது.

உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. சாரதி பெரும் அதிர்ச்சியால் நிலை குழம்பிக் காணப்பட்டார். அவர் மீது மது போதைப் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர் மது அருந்தியிருக்கவில்லை என்பதும் ஆரோக்கியமாகவே இருந்துள்ளார் என்பதும் பொலீஸாரால் உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் சாரதி போக்குவரத்துப் பணியாளர்களின் பராமரிப்பில் விடப்பட்டார்.

கண்காணிப்புக் கமரா காட்சிகளின் படி முதலில் பெண்ணே தன்னிச்சையாகத் தண்டவாளப் பகுதிக்குள் இறங்கியுள்ளார். பின்னரே ஆண் அவருடன் இணைந்துள்ளார். இருவரும் அங்கிருந்து ரயில் மேடைக்கு ஏறிவர முயற்சித்தனர்.

அவ்வேளையிலேயே அங்கு வந்தடைந்த ரயில் இருவரையும் மோதிப் பல மீற்றர்கள் தூரத்துக்கு இழுத்துச் சென்றது. இருவரது உடல்களும் ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே - சிக்குண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இருவரும் உயிரிழந்து விட்டனர் என்பதை மருத்துவர்கள் பின்னர் உறுதிசெய்தனர். 38 வயதான பெண்ணைப் பொலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். ஆண் யார் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.

இந்த விபத்து நேர்ந்த சமயம் ஜேர்மனிய நாட்டைச் சேர்ந்த மாணவர் குழு உட்பட சுமார் நூறு பயணிகள் வரை ரயில் நிலைய மேடையில் நின்றிருந்தனர். இரண்டு பேரை ரயில் மோதி இழுத்துச் செல்வதை நேரில் பார்த்த பலர் அவலக் குரல் எழுப்பினர்.

அதிர்ச்சியால் மனப் பாதிப்புக்கு உள்ளான நான்கு மாணவர்களைத் தீயணைப்புப் பிரிவினர் பராமரிக்க நேர்ந்தது.

விபத்து நிகழ்ந்த சூழ்நிலை தொடர்பாக பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாரிஸ் மெற்றோ 6 வழித்தடத்தில் கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் இடம்பெற்ற மூன்றாவது ரயில் விபத்துச் சம்பவம் இதுவாகும்.

கடந்த வாரம் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டசமயம் பெண் ஒருவர் அவரது ஜக்கெட் ரயில் கதவின் இடையே சிக்கியதில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். மற்றரு சம்பவத்தில் பாரிஸ் Cité Universitaire ரயில் நிலையத்தில் யுவதி ஒருவர் ரயில் மேடையை விட்டுத் தவறி வீழ்ந்து ரயிலினால் மோதுண்டு உயிரிழந்திருந்தார்.
Previous Post Next Post