பிரான்ஸில் பிரிஜித் மக்ரோனின் உறவினர் மீது ஓய்வூதியச் சட்ட எதிர்ப்பாளர்கள் தாக்குதல்!

பிரான்ஸின் முதற் பெண் பிரிஜித் மக்ரோனின் மூத்த மருமகன் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டிருக்கிறார். நாட்டின் வடக்கே அமியன் (Amiens) என்ற நகரத்தில் குடும்ப சொக்கிலேட் தயாரிப்பு, விற்பனை நிலையத்தில் வைத்து ஜோன் பப்ரிஸ் த்ரோனியோ (Jean-Baptiste Trogneux) என்பவரே திங்கட்கிழமை முன்னிரவு தாக்கி அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக எட்டுப் பேரைப் பொலீஸார் கைதுசெய்து தடுத்துவைத்திருக்கின்றனர்.

பிரிஜித் மக்ரோனின் குடும்பத்தினர் ஆறு தலைமுறைகளாகப் பிரபல சொக்கிலேட் மற்றும் மக்கரன் பிஸ்கட் தயாரிப்புத் தொழிற்துறையில் (la chocolaterie Trogneux) ஈடுபட்டு வருகின்றனர். அமியன் (Amiens) நகரிலும் நாட்டின் வட பகுதி நகரங்களிலும் த்ரோனியோ (Trogneux) சொக்கிலேட் மற்றும் இனிப்புப் பண்டங்கள் மிகப் பிரபலம் பெற்றவை.

அதிபர் மக்ரோன் நேற்று திங்கள் இரவு எலிஸே மாளிகையில் இருந்தவாறு தொலைக்காட்சி ஒன்றுக்கு விசேட செவ்வியை வழங்கியிருந்தார். அவரது செவ்வியில் ஓய்வூதியச் சட்டம் உட்படப் பல் வேறு விடயங்களைப் பற்றி அவர் பதில்களை வெளியிட்டிருந்தார்.

அந்த செவ்வி ஒளிபரப்பாகி நிறைவடைந்த பின்னரே மக்ரோன் தம்பதிகளது மூத்த மருமகன் ஓய்வூதிய எதிர்ப்பாளர்கள் அடங்கிய குழு ஒன்றினால் அவரது வர்த்தக நிலையத்தில் வைத்துத் தாக்கி அச்சுறுத்தப்பட்டார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிபரது தொலைக்காட்சி உரை இடம்பெற்றவேளை அந்தப் பகுதியில் சட்டி பானைகளைத் தட்டி ஒலி எழுப்பி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வர்களில் சிலரே திடீரென வந்து வர்த்தக நிலையத்தை நோக்கிக் கற்களை வீசியதுடன் தனது மகனைத் தலையிலும் கைகால்களிலும் தாக்கினர் என்றும் மக்ரோன் குடும்பத்தினரை இழிவுபடுத்திக் குரல் எழுப்பினர் எனவும் தாக்கப்பட்டவரின் தந்தையார் தெரிவித்திருக்கிறார்.

தாக்குதலுக்கு இலக்கான ஜோன் பப்ரிஸ் த்ரோனியோ (வயது 30) மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உள்ளார்.

முதற் பெண்மணி பிரிஜித் மக்ரோன் தனது மருமகன் தாக்கப்பட்டிருப்பதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அரசியல் தலைவர்கள் பலரும் கூட இது குறித்துத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். தீவிர வலதுசாரித் தலைவி மரின் லூ பென், "இவை போன்ற செயல்கள் சட்டத்தின் ஊடாக மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம்" எனக் கூறியிருக்கிறார்.

திங்கள் இரவு TF1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செவ்வியில் ஓய்வூதியச் சட்டம் தொடர்பான தனது உறுதியான நிலைப்பாட்டில் மிகக் கடுமையாக இருப்பதை மீண்டும் ஒரு தடவை மக்ரோன் தனது கருத்துகள் ஊடாக வெளிப்படுத்தியிருந்தார். அவரது உரை ஓய்வூதியச் சட்ட எதிர்ப்பாளர் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
Previous Post Next Post