பிரித்தானியாவில் இளம் பெண் குத்திக் கொலை!

பிரித்தானியாவில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது திருமணத்துக்காக இந்தியாவிற்கு நாடு திரும்பவிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானிய தலைநகர் லண்டனுக்கு மேற்படிப்பிற்காக சென்ற தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த கோந்தம் தேஜஸ்வினி (வயது 27) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் லண்டனின் வெம்ப்லே என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மற்றுமொரு பெண்ணுடன் தங்கியிருந்து வேலை செய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தேஜஸ்வினியின் வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்த பிரேசில் நாட்டை சேர்ந்த கெவன் அன்டோனியோ என்ற 23 வயது இளைஞர் தேஜஸ்வினியையும், அவருடன் தங்கியிருந்த பெண்ணையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதையடுத்து குறித்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இந்திய பெண் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரேசில் நாட்டு இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இளைஞரையும் கைது செய்த பொலிஸார் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே தேஜஸ்வினி தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் சென்ற பெண்ணுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டமையினால் விரைவில் அவர் இந்தியா வர இருந்தார் என தேஜஸ்வினியின் தந்தை கூறியுள்ளார்.

தேஜஸ்வினியின் உறவினர்கள் அவரது உடலை பிரித்தானியாவிலிருந்து ஐதராபாத்துக்கு கொண்டுவர தேவையான உதவிகளை செய்யும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post