யாழில் வீடு புகுந்த 13 ரவுடிகள் அட்டகாசம்! பேருந்துக்கும் தீ வைப்பு!! (படங்கள்)

யாழ்.தென்மராட்சிப் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் வீடு ஒன்றின் மீது சரமாரியான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் அப் பகுதியில் பதற்றம் நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் யாழ்.தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மாசேரி என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 13 பேர் கொண்ட குறித்த கும்பல் நேற்றிரவு பட்டா ரக வாகனம் ஒன்றில் மண் அள்ளப் பயன்படுத்தப்படும் சவள், கொட்டன், தடிகள், இரும்புக் கேடர்களுடன் வீட்டினுள் நுழைந்திருந்தனர்.

சம்பவத்தை அவதானித்த வீட்டின் உரிமையாளர், பிள்ளைகளையும் குடும்பத்தாரையும் அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்று கதவுகளை அடைத்துள்ளனர்.

தாக்குதலாளிகள் அங்கிருந்த பேருந்து மீது தீ வைத்ததுடன் வீட்டிற்கு மேல் ஏறி வீட்டின் கூரைகளையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

அதேபோல் வீட்டிற்கு வெளியே காணப்பட்ட தளபாடப் பொருட்களையும் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

வீட்டின் உரிமையாளரும் குடும்பத்தினரும் கூக்குரல் இட்டு கத்தியதுடன், தொலைபேசி ஊடாக அயலவர்களுக்கு தெரிவித்த நிலையில் கிராமத்து மக்கள் அங்கு திரண்ட போது பதற்றமான சூழல் நிலவியிருந்தது.

கிராமத்தவர்கள் ஒன்று திரள்வதை அவதானித்த தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி ஓடியதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

வீட்டின் உரிமையாளர் தனியார் போக்குவரத்து பேருந்து ஒன்றின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post