யாழில் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு 21 பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் வீதியில் பயணித்த 80 பேரின் வழக்குகள் இன்று நீதிவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டன.  அவர்களில் 21 பேர் மட்டுமே மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தை மீறி அத்தியாவசிய தேவைகள் ஏதுமின்றி வேண்டுமென்று பிரதேசத்தினுள் நடமாடித் திரிந்தமையால் 1947ஆம் ஆண்டு 25ஆம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் மூன்றாம் பிரிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றும் 1959ஆம் ஆண்டு 08ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 16(3) உப பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்துள்ளீர் என்று சந்தேக நபர்களுக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் 21 பேரும், தன்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். அதனால் அவர்களை குற்றவாளிகளாக இனங்கண்ட மன்று, 2 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து உத்தரவிட்டது.

ஏனைய 59 பேரின் வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டதுடன், மன்றில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்புக்கட்டளை வழங்க நீதிவான் உத்தரவிட்டார்.
Previous Post Next Post