யாழில் மண் கடத்தலுக்கு உளவு பார்த்த இளைஞன் சுட்டுக்கொலை! நால்வர் கைது!!

இராணுவச் சிப்பாயை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டுச் சென்ற இளைஞர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பளை பொலிஸார் கூறினார்.

இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றது.

சம்பவத்தில் கெற்பெலியைச் சேர்ந்த திரவியம் இராமலிங்கம் (வயது -24) என்ற இளைஞன் உயிரிழந்தார்.

சம்பவத்தையடுத்து பளை வைத்தியசாலை முன்பாக கூடிய உயிரிழந்தவரின் ஊர் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏ-9 வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.  ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதில் பொலிஸார் பெரும் முயற்சிகளை முன்னெடுத்தனர்.



“கிளாளிக்கு அண்மையாக முகமாலை இராணுவ முகாமுக்கு பின்புறமாக இன்று மாலை சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் 4 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பொலிஸாரின் நடமாட்டத்தை உளவு பார்க்கும் பணியில் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

உளவுபார்ப்பவர் மோட்டார் சைக்கிளில் அந்தப் பகுதியில் நடமாடுவதை அறிந்த இராணுவத்தினர் அவரை மறிக்க முற்பட்டனர். எனினும் அவர் இராணுவத்தினரை மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டுச் சென்றுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் மோதுண்டு நிலத்தில் விழந்த இராணுவச் சிப்பாய் இளைஞர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார். அதன்போதே இளைஞர் உயிரிழந்தார்.

சம்பவத்தையடுத்து சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.







Previous Post Next Post