அறிகுறியற்ற கொரோனா நோயாளிகள் இனி வீடுகளில் வைத்தே கண்காணிப்பு!


அறிகுறியற்ற கோவிட் – 19 நோயாளிகளுக்கு அவர்களது வீடுகளுக்குள் வைத்தே சிகிச்சை அளிக்கும் திட்டத்தை வரும் திங்கட்கிழமை (மே 17) ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.

பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் -19 நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நோயாளிகளில் எந்த அறிகுறிகளும் காணப்படாதுவிட்டால் அவர்களை புதிய நடைமுறையின் கீழ் வீடுகளில் வைத்தே கண்காணிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

“சுகாதார அதிகாரிகள் தற்போது சிகிச்சைகள் எவ்வாறு வழங்குவது மற்றும் ஒரு நோயாளி வீட்டில் சிகிச்சை பெற்றால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கி வருகின்றனர்.

அறிகுறியற்ற நோயாளிகள் ஏதேனும் சிக்கல்களால் பாதிக்கப்பட்டால், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள்” என்றும் இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார்.

தற்போது இலங்கையில் அறிக்கையிடப்பட்ட அனைத்து கோவிட்-19 நோயாளிகளும் ஒரு இடைநிலை சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆனால் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் காரணமாக பலர் இடைநிலை சிகிச்சை நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பு நான்கு முதல் ஐந்து நாள்கள் தங்கள் வீடுகளில் செலவிட வேண்டியிருந்தது.

இலங்கையில் தற்போது 27 ஆயிரத்து 56 பேர் கோவிட்-19 நோய்க்காக சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் அறிகுறியற்ற நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post